ஐ.நா.வை அலங்கரித்த அன்னான்!

ஐ.நா.வை அலங்கரித்த அன்னான்!
Updated on
2 min read

நாடுகளுக்கு இடையேயான அதிகாரப் போட்டியில், ஏதுமறியா சாமானியர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ‘மக்களாகிய நாம்’ என்ற முழக்கத்தோடு

1945-ல் உதயமானது ஐக்கிய நாடுகள் மன்றம். சுருக்கமாக ஐ.நா. உலக நாடுகளிடையே அமைதியையும் நட்புறவையும் வளர்க்கும் விதமாக ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பின் கட்டமைப்பாளர், அப்போதைய அமெரிக்க அதிபர் ஃபிராங்க்ளின் டி.ரூஸ்வெல்ட்.

ஐ.நா. ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இப்போதுவரை 9 பேர் அதன் பொதுச் செயலராக இருந்திருக்கிறார்கள். எனினும், அவர்களில் அந்தப் பதவியை ‘அலங்கரித்தவர்’ என்ற பெருமைக்கு உரியவர் 7-வது பொதுச் செயலராக இருந்த கோஃபி அன்னான் மட்டும்தான். அவர் இந்த மாதம் 18-ம் தேதி காலமானார்!

மனித உரிமைகளே முதன்மை

கோஃபி அன்னானுக்கு முன்புவரை, ஐ.நா.வின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டவர்கள் எல்லோரும், ஐ.நா.வின் ஓர் அங்கமான பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களால் வாக்களிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், அன்னான் மட்டும்தான், ஐ.நா. அமைப்பில் கடைநிலை ஊழியராகச் சேர்ந்து, பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிவிட்டு, பொதுச் செயலராக உயர்ந்தார்.

1997 முதல் 2006 வரை, இரண்டு முறை பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டு, தன் பதவிக்காலத்தை முழுமையாக முடித்த முதல் பொதுச் செயலர் இவர்தான். இவரது பதவிக்காலத்தில்தான் சர்வதேச நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. புத்தாயிரத்துக்கான வளர்ச்சி இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. எய்ட்ஸ் நோய் பரவுதல் பெருமளவில் குறைக்கப்பட்டது. இந்தக் காரணங்களுக்காக 2001-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவர் தலைமையிலான ஐ.நா.வுக்கு வழங்கப்பட்டது.

 இறப்புக்குப் பிறகு நோபல் அமைதிப் பரிசு வென்ற, ஐ.நா.வின் இரண்டாவது பொதுச் செயலர் டாக் ஹாம்மர்ஷொல்ட் மற்றும் நிறவெறிக்கு எதிராகச் செயல்பட்டு, இந்தப் பரிசை வென்ற முதல் ஆப்பிரிக்கர் ஆல்பர்ட் லுதுலி ஆகியோருக்கு அதைச் சமர்ப்பித்தார் அன்னான். தன் வாழ்வின் இறுதிவரைக்கும் இந்த இருவர் போட்டுக் கொடுத்த பாதையில் பயணித்த அன்னான், ‘மனித உரிமைகளை உலக நாடுகளில் நிலைநாட்டுவதுதான் ஐ.நா.வின் முதன்மையான கொள்கை’ என்று கருதினார்.

ஐ.நா. பொதுச் செயலர் பதவிக்கு, ‘பப்ளிக் ஃபிகர்’ அந்தஸ்து கிடைப்பதற்கு அன்னான் மேற்கொண்ட பணிகளும், செய்த சாதனைகளுமே காரணம்!

‘நான் ஒரு தலையீட்டாளன்!’

‘போர்தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான தடை’ என்று சொன்ன அன்னான், ஐ.நா.வின் மிக முக்கியமான பங்களிப்பாகக் கருதியது, அதன் அமைதிப்படையைத்தான். அதன் முதல் தலைவராகவும் அன்னான் பணியாற்றினார்.

தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு இந்த நாடுகள் அச்சுறுத்தல் விடுக்கும் என்று கருதிக்கொண்டு, குறிப்பிட்ட சில நாடுகளின் மீது போர் தொடுக்கும்போது, அங்கு மனித உரிமை மீறல்கள் அதிக அளவில் நடைபெறும். சாமானியர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். அப்போது, தனது அமைதிப்படை மூலம், அந்தப் போரில் ஐ.நா. தலையிட்டு (இண்டர்வென்ஷன்), அந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரும். அல்லது அந்த நாடுகளுக்கிடையில் சமரசத்தை ஏற்படுத்தும். அல்லது குறைந்தபட்சம் அந்தப் போர், இதர நாடுகளுக்குப் பரவாமல் தடுக்கவாவது செய்யும்.

‘மக்கள் ஆபத்தில் இருக்கும்போது, அந்த ஆபத்துக்கு எதிராக ஒவ்வொருவரும் கட்டாயமாகப் பேசியாக வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக நிற்க வேண்டும். அதுதான் ‘தலையிடுதல்’ என்பது. யுத்த காலத்தில் ஐ.நா. அப்படித்தான் செயல்பட்டு வருகிறது’ என்ற சொன்ன அன்னான், இறுதிவரையில் தன்னை ஒரு ‘தலையீட்டாளன்’ என்றே கருதி வந்தார். அதனால்தான் தன்னுடைய சுயசரிதைப் புத்தகத்துக்கும் ‘இண்டர்வென்ஷன்ஸ்’ என்று அவர் தலைப்பிட்டார்.

தமிழகத்தைப் போற்றிய அன்னான்!

நியூயார்க்கில், 2004-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி, ‘தலைமைப் பண்பு பெண்களிடமிருந்து வருகிறது’ என்ற தலைப்பில், சர்வதேச மகளிர் சுகாதாரக் கூட்டணி’ உறுப்பினர்களிடையே, உரையாற்றினார் அன்னான். எய்ட்ஸ் நோய்க்கு எதிராகப் பெண்கள் போராடுவது குறித்துப் பேசிய அவர், ‘ஒரு ஆப்பிரிக்கனாக நான் மிகவும் வெட்கப்படுகிறேன். ஆப்பிரிக்காவில் ஆண் குழந்தையைவிட பெண் குழந்தைகள் எய்ட்ஸ் நோய் பாதிப்புக்கு ஆளாவதற்கு 6 மடங்கு சாத்தியம் இருக்கிறது’ என்றார்.

எய்ட்ஸுக்கு எதிராகப் போராட இளம்பெண்கள் ஆர்வமாக முன்வர வேண்டும் என்று சொன்ன அன்னான், தமிழகத்திலிருந்து ஒரு முக்கியமான உதாரணத்தை எடுத்துக் கூறினார்:

“தமிழ்நாட்டில் உள்ள பெண்களைப் பாருங்கள். அங்குள்ள மாவட்டம் ஒன்றில், 15 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய சராசரியை விடவும், அவர்களது கல்வியறிவு விகிதம் குறைவாக இருந்தது. அந்தச் சமயத்தில் கல்வியறிவு பெற்ற பெண்கள், கல்வியறிவு பெறாத பெண்களுக்குக் கற்றுக்கொடுக்க முடிவெடுத்தனர். தூரம் தூரமாக இருக்கும் குக்கிராமங்களுக்கு எல்லாம் அந்தப் பெண்கள் சென்றனர்.

இது எப்படிச் சாத்தியம் ஆனது? கல்வி கற்ற பெண்கள், சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டனர். பிறகு, சைக்கிள்மூலம் அந்த மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்களுக்குக் கல்வி ஒளியை வழங்கினர். மூன்றே ஆண்டுகளில், அந்த மாவட்டம், முழுமையான கல்வியறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்டது!” என்றார். அன்னான் குறிப்பிட்ட அந்த மாவட்டம், புதுக்கோட்டை. அவரது இந்த உரை அவர் எழுதிய ‘வீ த பீப்பிள்ஸ்’ என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

தமிழகம் தலைநிமிர்ந்தது அன்னான்… நன்றி!கோஃபி அன்னான்: 1938-2018

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in