Published : 06 Aug 2018 10:28 AM
Last Updated : 06 Aug 2018 10:28 AM

மின்னணு வங்கி மோசடியை எதிர்கொள்வது எப்படி?

பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு மின்னணு பண பரிவர்த்தனை அதிகரித்திருக்கிறது. எனவே இத்தகைய பரிவர்த்தனைகளில் நிகழ வாய்ப்புள்ள மோசடிகள் குறித்தும், அதுசார்ந்து கிடைக்கும் உதவிகள் குறித்தும் ‘ ஜாங்கார் பானியே, சதார்க் ராஹியே’ முன்னெடுப்பின் மூலம் ரிசர்வ் வங்கி தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துவருவதைப் பார்க்கமுடிகிறது.

ஆன்லைன் முறையில் நடக்கக்கூடிய இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்றவற்றை மின்னணு பரிவர்த்தனைகள் எனலாம். கிரெடிட் அல்லது டெபிட் அட்டைகளின் மூலம் நடைபெறும் ஏடிஎம் அல்லது பாயிண்ட் ஆஃப் சேல் பரிவர்த்தனைகளையும் மின்னணு பரிவர்த்தனைகள் எனலாம். இந்தப் பரிவர்த்தனைகள் குறித்து நீங்கள் அறிந்துகொள்ளவேண்டிய நிறைய விஷயங்கள் உள்ளன, அவற்றைப் பார்ப்போம்.

யார் பொறுப்பு?

மின்னணு பரிவர்த்தனை முறையில் நீங்கள் மோசடிக்கு உள்ளானது வங்கியின் குறைபாடு மற்றும் அலட்சியத்தால் நிகழ்ந்தால் அதற்கு சட்டப்படி நீங்கள் பொறுப்பாளி அல்ல. இந்த மோசடி குறித்து நீங்கள் வங்கிக்கு தெரிவித்தாலும், தெரிவிக்காவிட்டாலும் நீங்கள் பொறுப்பாளி அல்ல. எது எப்படி இருந்தாலும், இழந்த தொகையை முழுமையாக பெறும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. ஒருவேளை மோசடி உங்களது அலட்சியத்தால் நிகழ்ந்திருக்குமேயானால் வங்கிக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கும்வரை மொத்த இழப்பையும் நீங்கள் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்.

வங்கிக்கு இந்த மோசடி பற்றி நீங்கள் தெரிவித்ததும் உடனடியாக மோசடியைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆனால் இந்த தடுப்பு நடவடிக்கைகள் மூலம் மோசடி முடிவுக்கு வராமல் மீண்டும் நடைபெறுமேயானால் அதற்கு வங்கிகள்தான் பொறுப்பு. வங்கிக்கு தகவல் தெரிவித்தபிறகு நீங்கள் மீண்டும் தொகையை இழந்தால், இழந்த தொகை முழுவதையும் வங்கி திருப்பி அளிக்கவேண்டும்.

நேரம் முக்கியமானது

உங்கள் தரப்பிலோ அல்லது வங்கித் தரப்பிலோ எந்த குறைபாடும் இல்லாத நிலையில் அமைப்பின் ஏதாவது ஒரு பகுதியில் ஏற்படும் சிக்கல்கள் காரணமாக மோசடி நிகழ்ந்தால், நீங்கள் எவ்வளவு கால அளவுக்குள், மோசடி குறித்து வங்கிக்கு தெரிவிக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது. மோசடி நிகழ்ந்து மூன்று வேலை நாட்களுக்குள் நீங்கள் வங்கிக்கு தகவல் தெரிவித்துவிட்டால் நீங்கள் இழந்த முழுத் தொகையும் உங்களுக்கு திரும்ப கிடைத்துவிடும்.

மோசடி நடைபெற்ற தகவலை நான்கு அல்லது ஏழு வேலை நாட்களுக்குள் நீங்கள் வங்கிக்கு தெரிவித்தால் பரிவர்த்தனையின் நிலையைப் பொறுத்து ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை நீங்கள் இழக்கநேரிடும். மோசடி நிகழ்ந்த தகவலை ஏழு வேலை நாட்களுக்குப் பிறகு நீங்கள் வங்கிக்குத் தெரிவித்தால் வங்கி எவ்வளவு தொகையைத் திருப்பித் தரும், உங்களுக்கு எவ்வளவு இழப்பு என்பதை வங்கியின் உள் நிர்வாகம் முடிவு செய்யும். 

வங்கியின் கடமைகள்

ஜூலை 2017 அன்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வாடிக்கையாளர் பாதுகாப்பு சுற்றறிக்கையின்படி, மின்னணு பரிவர்த்தனை குறித்த மின்னஞ்சல் எச்சரிக்கைகளை வங்கிகள் அனுப்பவேண்டியது கட்டாயமில்லை. ஆனால் எஸ்எம்எஸ் வழியிலான சேவையில் இணையுமாறு வாடிக்கையாளரை வங்கிகள் அறிவுறுத்துவதோடு மின்னணு பண பரிவர்த்தனை எச்சரிக்கைகளை எஸ்எம்எஸ் வழியாக கட்டாயம் அனுப்பவேண்டும்.

மின்னணு பண பரிவர்த்தனையில் வாடிக்கையாளருக்கு சந்தேகம் அல்லது முரண்பாடு எழுந்தால் மின்னணு பரிவர்த்தனை குறித்து வங்கி அனுப்பியுள்ள மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ்ஸுக்கு வாடிக்கையாளர் உடனடியாக பதில் அனுப்பும் வகையிலான வசதிகள் செய்யப்படவேண்டும். அங்கீகரிக்கப்படாத மின்னணு பரிவர்த்தனை புகார்களை பதிவு செய்வதற்கான நேரடி இணைய முகவரி வங்கி இணையதளத்தின் முதல் பக்கத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.

புகார் பெறப்பட்டதும் அதுகுறித்த தகவல் புகார் எண்ணுடன் வாடிக்கையாளருக்கு உடனடியாக தெரிவிக்கப்படவேண்டும். மோசடி குறித்து நீங்கள் தகவல் தெரிவித்த 10 நாட்களுக்குள்  இழந்த தொகையை வங்கி உங்களுக்கு திருப்பி அளிக்கவேண்டும். எவ்வகை மோசடியாக இருப்பினும் புகார் பெறப்பட்ட 90 நாட்களுக்குள் தீர்வு காணப்படவேண்டும். 

இந்த விதிமுறைகளை உங்கள் வங்கி அல்லது கிளை பின்பற்றவில்லை எனத் தோன்றினாலோ அல்லது பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் சிக்கல்கள் ஏற்பட்டலோ வங்கி ஆம்புட்ஸ்மேனை அணுகி  முறையிடலாம்.

- vardhini.c@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x