Published : 04 Aug 2018 06:31 PM
Last Updated : 04 Aug 2018 06:31 PM

விவாதக் களம்: சுய மருத்துவம் - விபரீத விளையாட்டு

இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் இறந்துபோன திருப்பூரைச் சேர்ந்த கிருத்திகாவைப் பற்றி ஜூலை 29-ல் வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் எழுதியிருந்தோம். மருத்துவர்களின் பரிந்துரையில்லாமல், தக்க மருத்துவ ஏற்பாடுகள் ஏதுமின்றி வீட்டில் வைத்துப் பிரசவம் பார்ப்பது சரியா எனக் கேட்டிருந்தோம். பலரும் இப்படியான வழக்கம்  எந்தவிதத்திலும் சரியல்ல என்றே குறிப்பிட்டிருந்தனர். அதற்காக இயற்கை மருத்துவத்தை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதும் தவறு எனச் சிலர் எழுதியிருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்கள் உங்கள் பார்வைக்கு:

மருத்துவ வசதிகள் பெருகிவிட்ட காலத்தில், இத்தகைய முயற்சிகள் தேவையில்லை. சுய மருத்துவம் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். கிராமங்களில் அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் பார்க்கும் பிரசவங்கள் பல தோல்வியில் முடிந்துள்ளன. கர்ப்பிணிப் பெண்கள் ஜன்னி, அதிக ரத்தப் போக்கு, வலிப்பு போன்றவற்றால் இறந்து விடுவதுண்டு. நிலைமை இப்படியிருக்க சுய பிரசவம், ஆபத்தான விளையாட்டே.

- கேசவ் பல்ராம், திருவள்ளூர்.

 

பிரசவம்  என்பது  பெண்களுக்கு  மறு பிறப்பு போன்றது. இப்போது அரசு  மருத்துவமனைகளில்  கட்டணமின்றி பிரசவம்  பார்க்கப்படுகிறது. தவிர அங்கே தாய்-சேய் உயிர் காக்கும் உபகரணங்களும் உண்டு.

- உஷா முத்துராமன், திருநகர்.

 

புதிது புதிதாக வியாதிகள் பரவிக்கொண்டிருக்கும் நிலையில் சுய மருத்துவம் என்ற பெயரில் உயிரோடு விளையாடக் கூடாது. இயற்கை மருத்துவம் நல்லதுதான். ஆனாலும், அதை நாமே முயலக் கூடாது. அதற்கெனப் படித்த நம்பகமான மருத்துவர்களையே அணுக வேண்டும்.

இணையதளங்கள் எந்த அளவுக்கு மக்களை அடிமையாக்கி வைத்திருக்கின்றன என்பதையே திருப்பூர் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. இணையம் சொல்வது எல்லாம் உண்மை என்று படித்தவர்களே கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். வாட்ஸ் அப்பில் வரும் செய்திகள் பலவும் வடிகட்டிய பொய்ச் செய்திகள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

ஒருவரது உடல்நிலைபோல் நிச்சயம் மற்றொருவருக்கு இருக்காது. ஒருவருக்கு உதவிய மருத்துவ முறை அப்படியே இன்னொருவருக்குப் பொருந்தாது. எங்கும் எதிலும் போலிகள் நிறைந்த இந்த உலகில், உண்மையான இயற்கை மருத்துவம் உள்ளதா என்பதே மிகப் பெரிய கேள்வி. யூடியூபில் வெளியாகும் பிரசவம் குறித்த வீடியோ பதிவுகள் குலைநடுங்க வைக்கின்றன. இதில் எத்தனை பதிவுகள் உண்மை என்பது தெரியாது.

செவிவழி சிகிச்சை முறைகளுக்கு செவி சாய்க்காமல் உரிய மருத்துவர்களைக் கலந்துகொண்டு அதற்கேற்பச் செயல்பட வேண்டும்.

அதிலும் ஒரு மருத்துவரையே நம்பிக் கொண்டிராமல் இன்னொரு மருத்துவரிடம்  ‘செகண்ட் ஒபீனியன்' பெறலாம்.

- தேஜஸ், காளப்பட்டி, கோவை.

 

விபத்து ஏற்படுகிறது என்பதற்காக யாரும் வாகனப் பயன்பாட்டைப் புறக்கணிப்பதில்லை. ஆனால், மருத்துவச் செலவு அதிகம் என்பதற்காக அலோபதி மருத்துவத்தைப் பலர் புறக்கணிக்கின்றனர். எல்லாவற்றிலும் பழமையை நோக்கி என்ற பயணத்தை ஆரம்பிப்பவர்கள் அலோபதி மருத்துவத்தைக் குறிவைப்பது ஆபத்தான போக்கு. பணத்துக்கு ஆசைப்படாமல் சேவையே லட்சியம் என்று ஊருக்கு ஒரு மருத்துவராவது இருக்கத்தான் செய்கிறார். பெரும்பணம் படைத்தவர்களுக்கென்று ஒரு மருத்துவமனை இருப்பதுபோல நடுத்தர வர்க்கத்தினருக்கும் ஏழைகளுக்கும் அரசு மருத்துவமனை உள்ளது.

இயற்கை வழியில் மாமிசம் உண்ணாமல் வாழ்கிறேன், சமைக்காமல் உண்கிறேன், தேங்காய் - வாழைப்பழம் மட்டுமே உண்கிறேன் என்பதெல்லாம் தனி மனித உடல்வாகைப் பொருத்தது. அது ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பொருந்தாது.  மருத்துவ முன்னேற்றம் உச்சத்தில் உள்ள அமெரிக்காவிலேயே ஒரு லட்சம் பிரசவத்தில் 13 பெண்கள் மரணமடைகிறார்கள்; இது சமீபத்தில் அதிகரிக்கவும் ஆரம்பித்துள்ளது. கேரளத்தில் பிரசவிக்கும் லட்சம் தாய்மார்களில் 46 பேரும் தமிழகத்தில் 66 பேரும் மரணமடைகிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரக் கணக்கு. எனவே, இயற்கை வழியென்று பிரசவத்தில் விஷப் பரீட்சை வேண்டாம்.

- ஜி. அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

 

திருப்பூர் பெண்ணுக்கு நடந்த துயரம், படுகொலைக்குச் சமம். இன்று கிராமங்களில் கூட வீட்டுப் பிரசவங்கள் தவிர்க்கப் படுகின்றன. அரசு மருத்துவமனைகளில் பிரசவத்துக்குத் தேவையான அனைத்து வசதியும் இருக்கும்போது, சில தனியார் மருத்துவ மனைகளின் கட்டணக் கொள்ளையை நினைத்து அச்சப்படத் தேவையில்லை.

-மேட்டுப்பாளையம் மனோகர், கோவை.

 

இந்தக் கால உணவு முறையும் வாழ்க்கை முறையும் பெண்களின் உடல் உறுதியைப் பாதிக்கின்றன. இதனால் அந்தக் காலத்தைப் போல வீட்டிலேயே பிரசவம் பார்க்காமல் காலத்துடன் உடன்பட்டுப்போவதுதான் நல்லது. உயிருடன் விளையாடக் கூடாது.

-பி.ஆர்.பீ, தலைஞாயிறு.

 

அந்தக் காலத்தில் வீடுகளில் நடந்த பிரசவம் அனைத்தும் அனுபவம் நிறைந்த தாதிகளின் முன்னிலையில் நடந்தன. ஆனால், சிக்கல் என்று வந்தபோது அவர்களும் மருத்துவமனைகளின் உதவி யைத்தான் நாடினார்கள். அன்று பிரசவ மரணங்கள் அதிகம். இன்றைய நவீன மருத்துவம் பெரும்பாலான பிரசவ நேரச் சிக்கல்களுக்குத் தீர்வு வைத்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளும் ஆரம்ப சுகாதார நிலையங்களும் அதிகரித்திருக்கும் நிலையில் வீட்டில் வைத்துப் பிரசவம் பார்க்கத் தேவையென்ன?

- குரு. பழனிசாமி, கோயம்புத்தூர்.

 

மருந்துவரின் மருந்துச் சீட்டு இல்லாமலேயே மருந்துக் கடைகளில் மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடும் மக்கள் அதிகமுள்ள நாடு இந்தியா. அதன் அடுத்தகட்ட நகர்வுதான் சமூக வலைத்தளங்களில் கொட்டிக் கிடக்கும் வீடியோக்களைப் பார்த்து நமக்கு நாமே மருத்துவம் பார்ப்பதும். நமக்கு இந்திய மருத்துவ முறைதான் வேண்டும் என முடிவெடுப்பதில் தவறில்லை. ஆனால், அந்த மருத்துவம் தொடர்புடைய மருத்துவரின் ஆலோசனை, வழிகாட்டல் எதுவும் இல்லாமல் நாமே சிகிச்சை முறையை மேற்கொண்டால் அது ஆபத்தில் முடியலாம். அறிவில் மேம்பட்ட சமூகம், சமூக வலைத்தளங்களின் பின்னால் சென்றால் அதன் மீட்சிக்கு வழியில்லை.

- சோ. ராமு, திண்டுக்கல்.

 

மருத்துவ வசதி இல்லாத அந்த நாளில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள் மருத்துவச்சியாக இருந்து பிரசவம் பார்த்தார்கள். அதனால், மகப்பேற்றை  மறுஜென்மமாகக் கருதினார்கள். இந்தக் காலத்தில் நவீன மருத்துவத்தில் எவ்வளவோ முன்னேறி விட்டோம். அதைத் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்வதுதான் நல்லது.

அரசு மருத்துவமனைகளில் இன்று  சுக பிரசவங்களே அதிகம் நடக்கின்றன. சிக்கல் அதிகரிக்கும்போதுதான் அறுவை சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதை விட்டுவிட்டு யூடியூப் பார்த்து பிரசவம் பார்ப்பது, நம் கையைக் கொண்டு நாமே கண்ணைக் குத்திக்கொள்வதைப் போலத்தான்.

- யசோதா பழனிச்சாமி, ஈரோடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x