

மாணவர்களுக்கு எத்தனையோ போட்டிகள் தமிழகம் எங்கும் நடத்தப்படுகின்றன. ஆனால், நம் எல்லோரையும் பாதுகாக்க அன்றாடம் எல்லைகளில் பனி, மழை, குளிர் என்று எதையும் பாராமல் தங்களை அர்ப்பணிக்கும் இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றும், அவர்களது தீரமிகு செயல்களைப் பரப்பும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. அவ்வாறு எல்லைகளையும் தேசத்தையும் காக்கத் தங்களது உடலையும் உயிரையும் தியாகம் செய்யும் வீரர்களைக் குறித்துப் பேசுவதே, ‘மறத்தல் தகுமோ’ போட்டி.
“நமது நன்றியும் விசுவாசமும் ராணுவ வீரர்களுக்கு மட்டுமல்ல; அவர்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் உரித்தானது. இவர்களுக்குத் தமது நன்றியைக் காட்ட, அவர்களைப் பற்றி மாணவர்களைப் பேச வைப்பபோமே என்று முடிவு செய்து சென்ற ஆண்டு இப்போட்டி தொடங்கப்பட்டது.
ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளிலும் பேசலாம். எந்தத் தியாகமும் ஒன்று, இரண்டு என்று தரம் பிரிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக வெற்றிபெறும் கல்லூரி மாணவர்களில் தரவரிசை கிடையாது. ஆங்கிலத்தில் இருவருக்கும் தமிழில் இருவருக்கும், சிறந்த பேச்சுக்குத் தலா ரூபாய் 10,000, தவிர ஒரு சிறப்புப் பரிசு ரூபாய் 5,௦௦௦ வழங்கப்படும். அனைத்துக் கல்லூரி மாணவர்களும் இப்போட்டியில் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள். போட்டிக்கான படிவங்கள் இணையத்தில் உள்ளது” என்கிறார் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சுமதி.
தமிழில் பேச விரும்பும் கல்லூரி மாணவர்கள் ‘மேன்மைமிகு தியாகம்’ என்ற தலைப்பிலும், ஆங்கிலத்தில் பேச விரும்பும் கல்லூரி மாணவர்கள் ‘The Supreme Sacrifice’ தலைப்பில் பேச வேண்டும்.
போட்டியின் முதல் இரண்டு சுற்றுகள் ஆகஸ்ட் 19-ம் தேதி பி.எஸ். மேல்நிலைப் பள்ளி, மயிலாப்பூரில் நடக்கவிருக்கிறது. இதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் 10 சிறந்த பேச்சாளர்கள் இறுதிச் சுற்றுக்கு அனுப்பப்படுவார்கள். செப்டம்பர் 15-ம் தேதி ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் நடக்கவுள்ள விழாவில், இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்பார்கள்.
கூடுதல் தகவலுக்கு: www.marathalthagumo.wordpress.com, 9791019627.