Published : 24 Aug 2018 09:25 am

Updated : 24 Aug 2018 09:25 am

 

Published : 24 Aug 2018 09:25 AM
Last Updated : 24 Aug 2018 09:25 AM

ராகயாத்திரை 19: காற்றில் வரும் கீதமே!

19

மழை பொழியவைக்கும் ராகம் அமிருத வர்ஷினி என்பார்கள். ‘அக்னி நட்சத்திரம்’ (1988) திரைப்படத்தில் யேசுதாஸ் - ஜானகி குரல்களில் இசைஞானி இந்த ராகத்தில் அமைத்த பாடல் ‘தூங்காத விழிகள் ரெண்டு’. அந்தப் பாடல் பதிவின்போது மழை பெய்ததாகக் கூறுவார்கள்.

நிஜமாகவே மழைபொழியுமோ தெரியாது. ஆனால் அப்பாடல் தெய்வீக இசை மழை என்பதில் சந்தேகமில்லை. சரியாகப் பதில் சொன்ன சென்னை ஷ்ராவண்யா மற்றும் சேலம் ஸ்வர்ணா ஆகியோருக்குப் பாராட்டுக்கள் . (மழையை நிறுத்த எதாவது ராகம் இருந்தால் கேரளாவில் போய் பாடலாம். போதுமடா சாமி பொழிந்தது).


‘அம்ருத வர்ஷினி’ கல்யாணி ராகத்தின் சேய் எனலாம். ஸ க2 ம2 ப நி2 ஸ் என்பதே இதன் ஸ்வரங்கள். இளையராஜவின் இன்னொரு அருமையான அம்ருத வர்ஷினி‘ஒருவர் வாழும் ஆலயம்’ (1988) படத்தில் வரும் ‘வானின் தேவி வருக’ என்னும் பாடல். ஜானகி - எஸ்.பி.பி குரல்களில் ஒலிக்கும் பாடல் அது. கொஞ்சம் வித்தியாசமாக‘மல்லுவேட்டி மைனர்’ (1990) படத்தில் ‘காத்திருந்த மல்லி மல்லி’ என சுசீலாவின் குரலில் அம்ருத வர்ஷினி ராகத்தை கொஞ்சம் இடைச் செருகல்களுடன் அமைத்திருப்பார்.

ராகங்களின் ராணி

கல்யாணி ராகம் 65-வது மேளகர்த்தா ராகம். ஸ ரி2 க2 ம2 ப த2 நி2 ஸ என்னும் ஸ்வரங்களைக் கொண்டது. இந்த ராகம் பற்றித் தனியாக ஒரு புத்தகமே போடலாம். இருப்பினும் அகஸ்தியர் கமண்டலத்தில் காவிரியை அடைத்தது போல் ஓரிரு பத்திகளில் சொல்ல முயற்சிக்கிறேன். ‘திருவருட்செல்வர்’ (1967) படத்தில் கே.வி.மகாதேவன் ‘மன்னவன் வந்தானடி’ என அமைத்திருப்பார். கல்யாணிக்கு ஒரு மகுடம் அது. அந்த வழியில் இளையராஜா ஏராளமான பாடல்களை இந்த ராகத்தில் தந்திருக்கிறார்.

அம்பிகை மேல் ஆதிசங்கரர் எழுதிய சௌந்தர்ய லஹரி என்னும் சுலோகங்களுடன் தொடங்கும் இரண்டு பாடல்களை இளையராஜா தந்திருக்கிறார். முதலாவது பரவச அனுபவம் தரும் ‘தாய் மூகாம்பிகை’ (1982) படத்தில் வரும் ‘ஜனனி ஜனனி’ இந்த ராகத்தில் மைல்கல். இன்னொன்று ‘காதல் ஓவியம்’ (1982) படத்தில் வரும் ‘நதியில் ஆடும் பூவனம்’ என்னும் பாடல். எஸ்.பி.பி - ஜானகி குரல்களில்ஒலிக்கும் இப்பாடல், கல்யாணி ராகம், ராகங்களுக்கெல்லாம் ராணி என்பதை உணர்த்த வல்லது. ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ (மன்னன்), ‘சிறுகூட்டுல உள்ள குயிலுக்கு’ (பாண்டி நாட்டுத்தங்கம்),

‘விழிகள் மீனோ’ (ராகங்கள் மாறுவதில்லை),‘நிற்பதுவே நடப்பதுவே’ (பாரதி), ‘வந்தாள் மகாலட்சுமியே’ (உயர்ந்த உள்ளம்) ‘வெள்ளைப் புறா ஒன்று’ (புதுக்கவிதை) என ஏராளமான முத்துக்கள் கல்யாணிக் கடலில் கொட்டிக் கிடக்கின்றன.

‘தளபதி (1991) படத்தில் வரும் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ ராஜா இசையமைப்பில் இந்த ராகத்தை வேறொரு தளத்துக்கு நகர்த்திச் செல்லக் கூடியது. அதுபோல் இன்னொரு மெகா கல்யாணி ‘ஒரு நாள் ஒரு கனவு’ (2005) திரைப்படத்தில் வரும்‘காற்றில் வரும் கீதமே’ என்னும் பாடல். ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல், பவதாரிணி, சாதனா சர்கம் எனப் பலப் பாடகர்கள் இணைந்து கதம்பமாக மணக்கும் அது, கல்யாணி எனும் நாரில் இளையராஜா கோர்த்த மலர்கள். இறுதியில் ஸ்வரப் பிரயோகங்களுடன் அதிரடியாக முடியும் அமர்க்களமான பாடல் அது.

‘க’ இல்லாத கல்யாணி.

கல்யாணிக்கு மிக நெருக்கமான ஒரு ராகம் வாசஸ்பதி. கல்யாணியில் நி யை மட்டும் நி1 என மாற்றினால் கிடைக்கும் 64-வது மேளகர்த்தா ராகம். அவ்வளவாக திரையிசையில் தோய்ந்திடாத இந்த ராகத்தில் பராத்பரா பரமேஸ்வரா என்னும் பாபநாசம் சிவன் பாடல் எம்.எஸ். பாடி மிகப் பிரசித்தம். பராத்பரா அமைந்த வாசஸ்பதி ராகத்தில் ‘பெரிய இடத்துப் பண்ணைக்காரன்’ படத்தில் பண்ணைபுரத்துக்காரர் பிரமாதமாகப் போட்டிருக்கிறார் ஒரு பாடல். ‘நிக்கட்டுமா போகட்டுமா’ என்று மனோ சித்ரா குரலில் ஒலிக்கும் அப்பாடலில் தலைமுறைகளைக் கடந்து மனதில் நிற்கும் என்பதில் ஐயமில்லை.

கல்யாணி ராகத்தின் இன்னொரு சேய் ராகம் சாரங்க தரங்கினி. ஸ ரி2 ம2 ப த2 நி2ஸ என ‘க’ இல்லாத கல்யாணி. (ல்யாணி). இந்த ராகத்தில் மெல்லிசை மன்னர்கள் ‘கர்ணன்’ படத்தில் போட்ட ‘இரவும் நிலவும்’ ஓர் இனிய பாடல். அதேபோல் இசைஞானி இந்த ராகத்திலும் இரண்டு வித்தியாசமான பாடல்களைத் தந்திருக்கிறார்.

‘தென்றலே என்னைத் தொடு’வில் (1985) மென்மையாகத் ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ என ஒரு தரமான பாடல். அதே சாரங்க தரங்கினிக்கு ‘ஊரு விட்டு ஊரு வந்து’ (1990) படத்தில் ‘சொர்க்கமே என்றாலும்’ என கிராமிய ரசம் சொட்டும் வேறொரு பரிமாணம்.

கல்யாணிக்கு மிகவும் நெருங்கிய இன்னொரு ராகம் லதாங்கி. கல்யாணியில் த2 வை த1 என மாற்றினால் கிடைப்பது. இந்த ராகத்தில் ‘ஆடாத மனமும் உண்டோ’ என மெல்லிசை மன்னர்கள் ‘மன்னாதி மன்னன்’ (1960) படத்தில் அருமையாகப் போட்டிருப்பார்கள். அதே லதாங்கியில் எஸ்.பி.பி பாடும் ‘தோகை இளமயில் ஆடி வருகுது’ (பயணங்கள் முடிவதில்லை), பி.சுசிலாவின் குரலில் ‘வனமெல்லாம் செண்பகப்பூ’ (நாடோடிப் பாட்டுக்காரன்) என சிறப்பான சில பாடல்களை அமைத்திருப்பார்.

இந்த ராகம் நாட்டியத்துக்கு ஏற்றதாகும் எனவே இதில் அமைந்த பாடல்கள் பெரும்பாலும் நடனமாடக்கூடிய பாடல்களாகவே இருக்கும். அதே லதாங்கி ராகத்தில் வித்தியாசமாகக் குத்துப் பாடல் போல் ஒன்று அமைத்திருக்கிறார். ‘வால்டர் வெற்றிவேல்’ (1993) படத்தில் வரும் ‘சின்ன ராசாவே’ என்னும் பாடல்தான் அது. அதுதான் ராஜா.

கேள்வியைக் கொஞ்சம் கடினமாக்குவோமா? பன்னிரெண்டு ராசிகளில் இரண்டாவது ராசிக்குப் பிடித்த ஒரு ராகத்தில் இளையராஜா ஒரு பாடல் போட்டிருக்கிறார். அந்த ராகம்? பாடல்? படம்?

தொடர்புக்கு:ramsych2@gmail.com
படங்கள் உதவி:ஞானம்


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author