தோல்வியும் பழகு

தோல்வியும் பழகு
Updated on
2 min read

போட்டிகளே ஆதிக்கம் செலுத்தும் நமது வாழ்வில் குடும்பத்தில் தொடங்கித் தேர்வுகள், விளையாட்டுகள்வரை வெற்றி பெறுவதென்பதே முதன்மை இலக்காக உள்ளது. படித்து முடித்து வேலைக்குச் செல்லும்போதும் மற்றவரை மிஞ்சி வெற்றி பெறுவதே பெரும்பாலானவர்களுடைய நோக்கமாக உள்ளது.

‘வாடிக்கையாளரை வெல்வது எப்படி?’, ‘பங்கு மார்க்கெட்டில் எப்படி வெல்லலாம்?’ என்பது போன்ற புத்தகங்களே சந்தையில் அதிகம் விற்கின்றன. ஆனால், வெற்றி என்ற இனிப்பை ருசிப்பதற்குத் தோல்வி என்ற கசப்பு அவசியம் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

தோல்வி என்ற நிலை சமீப காலமாகத்தான் சங்கடமாகப் பார்க்கப்படுகிறது. தோல்வியை எதிர்கொள்வது கலை என்கிறார் கவிஞர் எலிசபெத் பிஷப். இசைக் குறிப்புகளுக்கு நடுவில் உள்ள இடைவெளியான மௌனம்தான் தோல்வி; அந்த இடைவெளி வீணானதல்ல என்கிறார் இசையமைப்பாளர் கிளாட் டீபஸ்சி.

எச்சரிக்கை வசதி

பத்தாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு மோட்டார் நிறுவனம் நெருக்கடியில் இருந்தபோது, அந்த நிறுவனத்துக்குப் பொறுப்பேற்ற ஆலன் முலாலி, பிரச்சினைக்கான காரணத்தைக் கண்டறிய முயன்றார். உயர் பொறுப்பிலுள்ளவர்களிடம் பேசும்போது, அவர்கள் தங்கள் தோல்விகள் குறித்துப் பேச மறுத்ததை நேரடியாக உணர்ந்தார்.

தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ளும் பாடத்தை வெளிப்படையாகச் சொல்பவர்களைப் பகிரங்கமாக ஊக்கப்படுத்தும் நடவடிக்கையை எடுத்தார். அதுவரை சரிவைச் சந்தித்துவந்த ஃபோர்டு நிறுவனம் மீண்டும் துளிர்க்கத் தொடங்கியது. டொயோட்டோ நிறுவனத்திலும் காரைப் பொருத்தும் அசெம்பிளி வரிசையிலேயே 'தோல்வி எச்சரிக்கை' வசதிகள் உண்டு. ஒரு ஊழியர் ஒரு பிரச்சினையை உணர்ந்தால், அவர் உடனடியாக வேலையை நிறுத்தலாம்.

வெற்றியை காட்டிலும்...

உலகம் முழுக்க உருவாகியுள்ள சந்தைப் பொருளாதாரத்தின் தாக்கத்தால் நமது சமூகமும் சந்தைச் சமூகமாக மாறிவிட்டது. வர்த்தகத்தில் உள்ள நடைமுறைகளே அரசியல், குடிமை வாழ்விலும் ஊடுருவியுள்ளன. பணியிடங்கள், தொழிற்சாலைகள் முழுவதும் இயந்திரமயமாகிவரும் நிலையில் வளங்களை விநியோகிப்பதற்கும் பொருளாதார நிலைத்தன்மையை உத்தரவாதம் செய்வதற்கும் நமது அடையாளத்துக்குமானதாக வேலைகள் இனிமேல் இருக்கப்போவதில்லை. இந்தச் சூழலில் தோல்வி என்ற நிலையைச் சகித்துக்கொள்ளும் எதிர்கொள்ளும் மனநிலை மிகவும் அவசியமானது.

அடுத்த இருபது ஆண்டுகளில் தொழில்துறையில் 50 சதவீதம் மனித வளத்தைக் கணினி மென்பொருட்களும் ரோபோட்களும் இடம்பெயர்க்கப் போகின்றன. இதனால் பல்வேறு வேலைகள் மறையும், தற்காலிகப் பணிகளே கிடைக்கும் சூழல்தான் உலகம் முழுவதும் இருக்கப்போகிறது. அப்போது பணியாளர்களுக்குக் குறைந்த கவுரவமும் அதிகாரமும் வேலை சார்ந்த கட்டுப்பாடுமே இருக்கும்.

அதனால் எத்தனை எதிர்மறையான சூழ்நிலையிலும் சமாளிப்பதற்கான பக்குவத்தையும் மன உறுதியையும் பள்ளியிலிருந்தே கற்றுக்கொள்வதும் அவசியமானது. வர்க்கரீதியாகவும் கௌரவத்தின் அடிப்படையிலும் தோல்வி அடைவது என்பது எப்போதும் வெற்றிபெறுவதைவிட முக்கியமான அனுபவம் என்பதை நாம் பயிலத் தொடங்க வேண்டும்.

பணிரீதியாக ஏற்படும் தோல்வியையோ தனிப்பட்ட இழப்பையோ வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும் பின்னடைவாகப் பார்க்க வேண்டியதில்லை. மனித குலத்தின் ஒட்டுமொத்த அனுபவத்தில் தோல்வி என்பது அடிப்படை பரிணாமம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நமது தோல்வியின் மூலம் மனிதக் குலத்துக்குப் பங்களிக்கிறோம் என்பதே உண்மை.

நாம் ஒன்றில் ஜெயிக்கும்போது அதை மட்டுமே வென்றெடுக்கிறோம். தோல்வியுறும்போது எல்லாவற்றையும் அரவணைக்கிறோம்.

பயில்வது எப்படி?

# நிராகரிக்கப்படும்போது, வேலையிலிருந்து நீக்கப்படும்போது, விளையாட்டுப் போட்டியில் தோற்கும்போது உங்கள் தோல்விகளைப் பார்த்துச் சிரித்து அதை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

# உங்கள் தோல்விகளைக் கரிசனத்துடன் ஏற்றுக்கொண்டு மற்றவர்களின் நெருக்கடியில் உதவுங்கள்.

# புதியவற்றைத் தினந்தோறும் செய்யுங்கள்.

# உங்களை அசௌகரியப்படுத்தும் ஒரு வேலையிலாவது தினசரி ஈடுபடுங்கள்.

# உங்கள் அகந்தையைத் தோற்கடித்தபடி இருங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in