Published : 10 Aug 2018 10:17 AM
Last Updated : 10 Aug 2018 10:17 AM

ராகயாத்திரை 17: மாலையில் யாரோ மனதோடு பேச...

கடந்த வாரம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில்‘உன்னால் முடியும் தம்பி’ (1988) படத்தில் வரும் ‘புஞ்சை உண்டு நஞ்சை உண்டு’ என்ற பாடல். சுத்த தன்யாசி ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல். சுத்த தன்யாசி அல்ல அசுத்த தன்யாசி என ஜெமினி கணேசன் திட்டினாலும் அவரே பின்னர் சிலாகிக்கும் மெட்டு அது.

‘உள்ளவை யாவும் யாருக்கும் சொந்தம் என்றிங்கு மாறும் வேளை வரும்’ என்பன போன்ற பொதுவுடைமைச் சிந்தனை வரிகளைக் கொண்ட புலமைப்பித்தன் எழுதிய பாடல் அது. சரியாகச் சொன்ன ஏராளமானவர்களில் முதல்வர்களான திருவண்ணாமலை வைத்தியநாதன். ஈரோடு இளையராஜா கன்னையா ஆகியோருக்குப் பாராட்டுகள்.

சுத்த தன்யாசி ஒரு சுத்த சன்னியாசி போல் எளிமையான ராகம். ஸ க1 ம1 ப நி1 ஸ் என ஐந்தே ஸ்வரங்கள் தான். சினிமாக்களில் திருமணக் காட்சி வரும் போது நாகஸ்வரத்தில் இந்த ராகத்தில் அமைந்த ‘பாவமுலோனா’ என்ற பாடலை வாசிக்க வேண்டும் என்பது விதியாக இருந்தது. மெல்லிசை மன்னர்கள் இந்த ராகத்தில் ‘தொட்டால் பூ மலரும்’ (படகோட்டி 1964) , ‘கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே’ (கர்ணன் -1964) என அசத்தியிருந்தாலும் அவர்களது மாஸ்டர்பீஸ் ‘பலேபாண்டியா’வில் (1962) வரும் ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ என்ற பாடல்தான். 24 கேரட் சுத்தமான சுத்த தன்யாசி அது. டி.எம்.எஸ் ஸ்வரங்களைப் பிரமாதமாகப் பாடியிருப்பார்.

ராஜாவின் இசை வண்ணத்தில்

இசைஞானி இந்த ராகத்தில் போட்ட பாடல்களைப் பற்றி எழுத ஒரு வாரம் போதுமா எனக் கேட்கும் அளவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை இந்த ராகத்தின் அடிப்படையில் அமைத்திருக்கிறார். அந்த ஒரு அண்டா சோற்றிலிருந்து சில பருக்கைகளை மட்டும் குறிப்பிடுகிறேன். ‘காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு’ (பகவதிபுரம் ரயில்வே கேட்); சூரசம்ஹாரம் படத்தில் ‘ஆடும் நேரம் இதுதான் இதுதான்’ என சுசீலாவின் குரலில் போதையாக ஒரு பாடல்; மனோ - சித்ரா குரலில் ‘பூந்தோட்டக் காவல்காரன்’ படத்தில் ‘பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்’ என ஜம்மென்று ஒரு மெட்டு;

‘இளமைக் காலங்கள்’ படத்தில் அட்டகாசமாக சுசீலாவின் குரலில் ‘ராகவனே ரமணா’ ரகுநாதா’ என்று ஒரு பாடல்; இளையராஜாவே பாடிய ‘சிறு பொன்மணி அசையும்’ என்னும் அழகிய பாடல் (கல்லுக்குள் ஈரம்); ரொம்பவும் ஸ்டைலாக மேற்கத்திய பாணியில் ‘ஹே… உன்னைத்தானே’ (காதல் பரிசு) எனப் பலப் பாடல்கள். இவை வெறும் சாம்பிள்தான்.

மறக்க முடியாத இரண்டு

இந்த ராகத்தில் மறக்க முடியாத பல பாடல்கள் உண்டு என்றாலும் எனது தேர்வில் இரண்டு பாடல்களைக் குறிப்பிடுகிறேன். முதலாவது‘அலைகள் ஓய்வதில்லை’ (1981) படத்தில் வரும் ‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து’ என்னும் பாடல். ‘தகிட தகிட’ எனப்படும் திஸ்ர என்னும் ஜதியில் விறுவிறுப்பாக ஸ்வரங்களுடன் அமைந்த பாடல். இளையராஜா, சசிரேகா பாடிய மறக்க முடியாத பாடல். பாடலைக் கேட்டால் ஸ நி ப ம க என்ற ஐந்து ஃஸ்வரங்கள் மட்டுமே வருவதை அறியலாம்.

இந்த ராகத்தில் இன்னொரு இனிமையான பாடல்‘சத்திரியன்’ (1990) படத்தில் வரும் ‘மாலையில் யாரோ மனதோடு பேச..’ என்னும் பாடல்தான். பாடலின் தொடக்கத்தில் இசைக்கருவிகள் ஸ்வரங்களை மழையாகப் பொழிய, சுவர்ணலதாவின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் நம்மை வேறு உலகத்துக்குக் கொண்டு செல்லும். இப்படத்தின் இப்பாடலைக் கேட்கும்போது பழைய சுவர்ணலதா மீண்டும் உயிரோடு வரமாட்டாரா என்ற ஏக்கம் பிறக்கிறது. சுவர்ணலதா என்றால் பலருக்கும் இப்பாடல்தான் நினைவுக்கு வரும்.

சென்ற வாரம் போன்றே இந்த வாரமும் கொஞ்சம் அரிய ராகங்களைப் பார்க்கலாமா? சுத்த தன்யாசியின் சின்ன மா வைப் பெரிய மா வாக ஆக்கிவிட்டால் கிடைக்கும் ராகத்தின் பெயர் மதுகௌன்ஸ். இந்துஸ்தானி இசையில் பிரபலம். நம் ஊரில் இதற்கு இணையாக சுமனேசரஞ்சனி என்ற ராகம் உள்ளது. இந்த ராகம் ஸ க1 ம2 ப நி1 ஸா என்னும் ஸ்வரங்களைக் கொண்டது. இந்த ஸ்வரங்களை வைத்து இளையராஜா‘அகல்விளக்கு’ (1979) என்னும் படத்தில் ‘ஏதோ நினைவுகள்’ என்னும் பாடலை அமைத்திருப்பார்.

ragam 2jpgஇளையராஜாவுடன் பாரதிராஜா

யேசுதாஸ், எஸ்.பி.ஷைலஜாவின் குரல்களில் ஒலிக்கும் அப்பாடல் மென்மையும் இனிமையும் கலந்து செய்த கலவையாக இன்னும் நம் காதுகளில் வட்டமிடும். இதே ராகத்திலேயே கொஞ்சம் ஆங்காங்கே வேறு ஸ்வரங்களைத் தூவி ‘மறுபடியும்’ (1993) என்ற படத்தில் ‘நலம் வாழ எந்நாளும்’ என்ற பாடலை அமைத்துள்ளார்.

பிரபலமான ராகங்களிலிருந்து ஓரே ஒரு ஸ்வரத்தை மட்டும் மாற்றி வரும் பிரபலமில்லாத ராகங்களில் இசையமைப்பது இசைஞானியின் பாணி. அதே சுத்த தன்யாசியின் ஸ்வரங்களில் நி யை மட்டும் மாற்றினால் கிடைக்கும் ராகத்தின் பெயர் ஸ்ரோதஸ்வினி .

அதாவது ஸ க1 ம1 ப நி 2 ஸ என அமைந்திருக்கிறது. இந்த ராகத்தில் இளையராஜா சில அருமையான பாடல்களை அமைத்துள்ளார். ‘நீங்கள் கேட்டவை’ என்ற  படத்தில் வரும் ‘ஓ வசந்த ராஜா…’ என்ற பாடல் அதில் ஒன்று. ஜானகி, எஸ்.பி.பி.குரல்களில் ஒலிக்கும் அந்தப் பாடல், நாம் கேட்டுக் கொண்டே இருக்கும் பாடலாகும். அதே போல் இந்த ராகத்தின் அளவுகோலில் அமைத்த இன்னொரு பிரமாதமான பாடல் ‘சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு’ என்ற‘பூந்தோட்டக் காவல்காரன்’ படப் பாடலாகும். யேசுதாஸ் , சுசீலாவின் குரலினிமையும் மெட்டின் இனிமையும் சேர்ந்து மறக்க முடியாத பாடலாக அமைந்துவிட்டது.

கொஞ்சம் கடினமான கேள்வியோடு முடிப்போமா? ‘உன்னால் முடியும் தம்பி’ திரைப்படத்தில் ஜெமினியின் பெயரோடு ஒரு ராகமும் அடைமொழியாக வருகிறது. இந்த ராகத்தில் ஸ்ரீதேவி நடித்த ஒரு படத்தில் ஓர் அருமையான பாடல் உள்ளது அது? (க்ளு –பாம்பு). கூகுளை வேண்டுமானால் துணைக்குக் கூட்டிக் கொள்ளுங்கள்!

தொடர்புக்கு:ramsych2@gmail.com
படங்கள் உதவி:ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x