Last Updated : 20 Aug, 2018 11:19 AM

 

Published : 20 Aug 2018 11:19 AM
Last Updated : 20 Aug 2018 11:19 AM

கிங்பிஷர் வழியில் ஜெட் ஏர்வேஸ்?

சர்வதேச அளவில் பார்க்கும்போது இந்திய விமான போக்குவரத்து துறை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு உலகில் தயாராகும் புதிய விமானங்களில் 5 சதவீதம் இந்தியாவுக்கு வர இருக்கின்றன. இது உண்மையாக இருந்தாலும்,  இந்திய விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதும் உண்மைதான்.

2012-ம் ஆண்டு கிங்பிஷர் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் கடும் நிதி நெருக்கடியை சந்தித்தது. அடுத்த கிங்பிஷர், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்தான் என பொருளாதார பத்திரிகைகள் எழுத தொடங்கிய நேரத்தில் அஜய் சிங் தலைவராக பொறுப்பேற்று நிலைமையை மேம்படுத்தினார்.

அடுத்து பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை பற்றி சொல்லத்தேவையில்லை. ரூ.50,000 கோடி அளவுக்கு கடன் இருக்கிறது. மத்திய அரசு எடுத்த பங்கு விலக்கல் நடவடிக்கையும் தோல்வியில் முடிவடைந்திருக்கிறது. ஏர் இந்தியாவை ஏலம் கேட்க எந்த நிறுவனமும் முன்வராத சூழலில் மத்திய அரசு அடுத்து என்ன செய்வது என யோசித்து வருகிறது.

இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. 60 நாட்களுக்கு மட்டுமே நிறுவனத்தை நடத்துவதற்குத் தேவையான நிதி இருப்பதாக  ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஜெட்  ஏர்வேஸ் அறிவித்தது. அதில் இருந்து ஜெட் ஏர்வேஸ் தொடர்பாக தினமும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 24 சதவீத பங்குகளை அபுதாபியை சேர்ந்த எதியாட் நிறுவனத்துக்கு விற்றது. இருந்தாலும் கடந்த நிதி ஆண்டு முடிவில் ரு.320 கோடி அளவில் மட்டுமே ரொக்கம் இருக்கிறது. ஜெட் ஏர்வேஸ் போன்ற ஒரு நிறுவனத்தை நடத்துவதற்கு ஒரு நாளைக்கு ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி அளவுக்கு தேவைப்படும்.

தவிர முக்கிய உயரதிகாரிகளின் சம்பளத்தை 25 சதவீதம் குறைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. பைலட் உள்ளிட்ட முக்கிய உயரதிகாரிகள் நிறுவனத்தின் உண்மையான நிதி நிலைமை குறித்து கேட்டதாகவும்,  சம்பள குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பள குறைப்புக்கு பதிலாக பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. 

ஆனால் இவை அனைத்துமே உறுதிபடுத்தப்படாத தகவல்தான். இந்த நிலையில் ஜுலை மாதம் 9-ம் தேதி காலாண்டு முடிவுகளை வெளியிட நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்த நிதி சிக்கல் எழுந்ததால் காலாண்டு முடிவுகள் வெளியிடுவதைத் தள்ளிப்போடுவதாக அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் காலாண்டு முடிவுகள் ஆகஸ்ட் 27 அன்று வெளியாகும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் முதல் மூன்று காலாண்டுகளில் லாபம் ஈட்டிய ஜெட் ஏர்வேஸ் நான்காவது காலாண்டில் (மார்ச்) ரூ.1,036 கோடி அளவுக்கு நஷ்டமடைந்தது. இதனால் ஒட்டுமொத்த நிதி ஆண்டில் ரூ.767 கோடி அளவுக்கு நஷ்டம் அடைந்தது.

நடப்பு நிதி ஆண்டில் ஜூன் காலாண்டில் ரூ.1,000 கோடி அளவுக்கு நஷ்டம் இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் என பங்குச்சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இந்த காரணங்களால் ஜெட் ஏர்வேஸ் பங்கு கடுமையாக சரிந்திருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 870 ரூபாயில் வர்த்தகமான இந்த பங்கு தற்போது 300 ரூபாய் அளவுக்கு சரிந்துவிட்டது.

சிக்கலுக்கு என்ன காரணம்?

அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சிக்கல்தான் என்றாலும், பலவீனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக குறைவாக இருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது உயரத்தொடங்கி இருக்கிறது. ஒரு பேரல் 50 டாலரில் இருந்து 70 டாலருக்கு மேல் அதிகரித்திருக்கிறது.

விமான நிறுவனங்களை பொறுத்தவரை இது மிகப்பெரும் சுமையாகும். அதே சமயத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவும் பெரும் சுமையை விமான நிறுவனங்களுக்கு உண்டாக்கி இருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் 9 சதவீதத்துக்கு மேல் ரூபாய் மதிப்பு சரிந்திருக்கிறது. அதிக சந்தையை வைத்திருக்கும் இண்டிகோ நிறுவனத்தின் (ஜூன் காலாண்டு) நிகர லாபமும் 97 சதவீதம் வரை சரிந்திருக்கிறது.

எரிபொருள் விலை உயர்ந்தாலும் கட்டணத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் ஜெட் ஏர்வேஸினால் செய்ய முடியவில்லை. ஒரு வேளை கட்டணங்களை உயர்த்தினால் பட்ஜெட் விமான நிறுவனங்கள் அந்த சந்தையை பிடித்துக்கொள்ளும் என்பதால் நெருக்கடியில் ஜெட் ஏர்வேஸ் இருக்கிறது.

தலைமை பிரச்சினை

கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை அனைத்து நிறுவனங்களுக்குமான பிரச்சினை என்றாலும் ஜெட் ஏர்வேஸுக்கென பிரத்யேகமான பிரச்சினை ஒன்று இருக்கிறது. அதுதான் தலைமை பிரச்சினை. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கிராமர் பால் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராஜினாமா செய்தார். ஆனால் 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை தலைமை பதவி காலியாக இருந்தது. 

ஆகஸ்ட் மாதம் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி வினய் துபே நியமனம் செய்யப்பட்டார். ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் கவுரங் ஷெட்டி மற்றும் அமித் அகர்வால் ஆகிய இருவர் தற்காலிக தலைமைச் செயல் அதிகாரிகளாக இருந்தனர்.

சர்வதேச அனுபவம் மிக்கவர் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்க வேண்டும் என நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் விரும்பியதாகவும் அதனால் இரு ஆண்டுகள் நிரந்தர தலைமைச் செயல் அதிகாரி நியமிக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.  யார் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தாலும் நரேஷ் கோயலின் பங்களிப்பும் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பங்களிப்பா அல்லது தலையீடா என்பது எடுத்துக்கொள்வதை பொறுத்து இருக்கிறது.

தீர்வு என்ன?

2001-ம் ஆண்டு அமெரிக்காவில் நிகழ்ந்த இரட்டைக் கோபுர தகர்ப்பு மற்றும் 2008-ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு சமயங்களில், விமான போக்குவரத்து துறை சிக்கலில் இருந்ததால் சம்பள குறைப்பு செய்யப்பட்டது. ஆனால் அந்த குறைப்பினை மீண்டும் உயர்த்தவில்லை என ஜெட் பணியாளர்கள் கூறியிருக்கிறார்கள். அதனால் இந்தமுறை சம்பள குறைப்பு செய்ய முடியுமா என்பது சந்தேகமே.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிடம் வாங்கிய கடன் இதுவரை சரியாக செலுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது என்றாலும், வங்கி கூடுதல் கடன் கொடுக்குமா என்பது சந்தேகமே. கிங்பிஷர் நிறுவனத்துக்கு கொடுத்த கடனே திரும்பி வரவில்லை என்னும் பட்சத்தில் சிக்கலில் இருக்கும் இன்னொரு விமான நிறுவனத்துக்கு கடன் வழங்க வங்கிகள் முன்வருவது சந்தேகம்.

அதே சமயத்தில் நிதி திரட்டுவதற்காக ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகளை விற்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. துணை நிறுவனங்களின் பங்குகளை பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களுக்கு விற்பதற்கான பேச்சு வார்த்தையும் நடந்து வருவதாகத் தெரிகிறது.

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழந்தது குற்ற உணர்வாக இருக்கிறது என தலைவர்  நரேஷ் கோயல் கூறியிருக்கிறார். ஆனால் கடந்த மே மாதம் ஜெட் எர்வேஸ் 25 ஆண்டினை கொண்டாடியது. அப்போது உற்சாகமாக பேசிய நரேஷ் கோயல் அடுத்த ஒருசில மாதங்களிலே கவலையுடன் பேசியிருக்கிறார்.பணக்காரர்கள் நிம்மதிக்காக விமானத்தில் பறப்பார்கள். ஆனால் விமான நிறுவனம் நடத்துபவர்கள் நிம்மதியாக இருக்க முடியாது என்பதற்கான சமீபத்திய உதாரணம் நரேஷ் கோயல். அடுத்த கிங்பிஷர் உருவாகக் கூடாது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்.

- karthikeyan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x