

அறிவியல் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. ஆனால், இன்றும் பல்வேறு மூடநம்பிக்கைகளை நம்புகிறார்கள் மக்கள். இதிலிருந்து மக்களை மீட்க கலிலியோ, சாக்ரடீஸ் தொடங்கி, ராஜா ராம் மோகன் ராய், பெரியார் எனத் தொடர்ந்து 2013-ல் மூடநம்பிக்கை கொண்ட சமூக விரோதிகளால் கொல்லப்பட்ட நரேந்திர தபோல்கர்வரை, வரலாறு நெடுகிலும் பல அறிஞர்கள் வந்துகொண்டேயிருக்கிறார்கள்.
மருத்துவரான நரேந்திர தபோல்கர், 12 ஆண்டு மருத்துவச் சேவைக்குப் பிறகு, சமூகத்தில் நிலவிய மூடநம்பிக்கை நோய்களுக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவராக வலம் வந்தார். 1989-ம் ஆண்டு ‘மகாராஷ்டிர மூடநம்பிக்கை ஒழிப்புக் குழு’ என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, போலி சாமியார்களை எதிர்த்து வந்தார். அதன் காரணமாகக் கொல்லப்பட்டார்.
2014 முதல், தபோல்கர் கொல்லப்பட்ட ஆகஸ்ட் 20-ம் தேதியில், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அறிவியலைப் பரப்பும் முயற்சியில் பல்வேறு அறிவியல் அமைப்புகள் ஈடுபட்டு வந்தன.
அதன் தொடர்ச்சியாக, ‘ஆல் இந்தியா பீப்பிள் சயின்ஸ் நெட்வர்க்’ எனும் அறிவியல் அமைப்பு, இந்த ஆண்டு முதல் ஆகஸ்ட் 20-ம் தேதியை ‘தேசிய அறிவியல் மனப்பான்மை நாள்’ ஆகக் கடைப்பிடிக்க, மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அதென்ன அறிவியல் மனப்பான்மை?
ஆங்கிலத்தில் ‘சயின்டிஃபிக் டெம்பர்’ என்ற பதம் தமிழில் ‘அறிவியல் மனப்பான்மை’ என்று கொள்ளப்படுகிறது. மனித வாழ்க்கையில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வையும் பகுத்தறிவுடன் அணுகுவதே ‘அறிவியல் மனப்பான்மை’. இந்தப் பதத்தை இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியவர் முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு. 1946-ல் வெளிவந்த அவரது ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ எனும் புத்தகத்தில் இந்தப் பதத்தை அவர் கையாள்கிறார்.
அமைப்புகள் சொல்லும் அறிவியல்
நேருவின் முயற்சியால் 1958-ம் ஆண்டு, ‘அறிவியல் கொள்கைத் தீர்மானம்’ ஒன்று கொண்டுவரப்பட்டது. நாட்டின் கனவுகள் எல்லாம், அறிவியலை அடிப்படையாக வைத்து செயற்படுத்தப்பட வேண்டும் என்ற அவரின் தொலைநோக்குப் பார்வையால் விளைந்த முயற்சி இது.
பிறகு, 1976-ல், இந்திய மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்பதற்காக, ‘நேஷனல் கவுன்சில் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கம்யூனிகேஷன்’ எனும் அமைப்பு, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் ஏற்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1989-ல் சாமானியர்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும், எளிய மொழியில், அறிவியலைக் கொண்டு சேர்ப்பதற்காக ‘விஞ்ஞான் பிரசார்’ எனும் அமைப்பு தொடங்கப்பட்டது.
இன்று, நாட்டில் அறிவியலைப் பரப்பும் முக்கியமான பணியை இந்த இரண்டு அமைப்புகளும் செவ்வனே செய்து வருகின்றன. அறிவியல் மனப்பான்மையை வளர்க்க ‘ஜர்னல் ஆஃப் சயின்டிஃபிக் டெம்பர்’ (https://bit.ly/2wd0pW3) என்ற இதழ்கூட நம் நாட்டில் வெளிவருகிறது.
பலருக்கும் நல்லதொரு விஷயமாகத் தெரியும் ‘அறிவியல் மனப்பான்மை’ தொடர்பான மேற்கண்ட முயற்சிகளை, ஆஷிஷ் நந்தி போன்ற ஆளுமைகள் சிலர் ‘பயனற்றது’ என விமர்சித்தனர். இந்த அமைப்புகளுக்கு எதிராக ‘மாற்று அறிவியலை முன்னெடுக்கிறோம்’ என்று சொல்லி, சென்னையில், ‘பேட்ரியாட்டிக் பீப்பிள் ஃபார் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’ எனும் அமைப்பு, 90-களில் இயங்கி இருக்கிறது.
இப்படியாகத் தொடர்ந்து வரும், அறிவியல் மீதான அடுத்த தாக்குதல்தான் ‘புராண காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது’ என்று சொல்வதும், அதை விமர்சிப்பவர்களை கொல்வதும். உலகம் முழுக்கவும் நடைபெறும் அறிவியல் மீதான தாக்குதலின் ஒரு சிறு பிரதிபலிப்புதான் இந்தியாவில் நடப்பது. அதை எதிர்க்கும் பணியில், இன்னொரு மைல்கல்லாக ‘தேசிய அறிவியல் மனப்பான்மை நாள்’ அமையட்டும்!