Last Updated : 10 Aug, 2018 10:07 AM

 

Published : 10 Aug 2018 10:07 AM
Last Updated : 10 Aug 2018 10:07 AM

நடிகர்களை நீக்க நடிகர் சங்கம் எதற்கு? - ராதாரவி பேட்டி

சில வருடங்களுக்கு முன்பு இயக்குநர் பாக்யராஜ் ஒரு மேடையில பேசும்போது, ‘எங்களைவிட இங்கே அமர்ந்திருக்கும்  பிரபு, கார்த்திக், ராதாரவி மாதிரியான நடிகர்களுக்குத்தான் சிரமம் அதிகம். ஏன்னா, அவர்கள் எப்படி நடித்தாலும் உடனே ரசிகர்கள் அவங்க அப்பாவோடு ஒப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். அப்படிப்பட்ட ஜாம்பவான்கள். அதற்காகவே இவர்கள் ஏனோ, தானோவென நடித்துவிட முடியாது’ என்றார். இதோ சினிமாவுக்கு வந்து 44 வருஷங்கள் ஓடியே போச்சு. இப்பவும் பிடித்து ரசித்து இந்த வேலையைச் செய்றதாலதான் இந்த சினிமாவும் என்னை விடாம பிடிச்சு வைத்திருக்கு!’’ என்று இயல்பாக உரையாடத் தொடங்கினார் ராதாரவி.

தமிழ் சினிமா பெரும்பாலும் வில்லனாக மட்டுமே உங்களை அடையாளப்படுத்தியதில் வருத்தம் இருக்கிறதா?

நான் எதுக்கு வருத்தப்படணும். ‘நாய் வித்தக் காசு குரைக்கவா செய்யும்னு’ ஊர்ப்பக்கம் சொல்வாங்க.அப்பா எம்.ஆர்.ராதா, அண்ணன் வாசு. ரெண்டு பேருமே அதிகமா வில்லனாக அடையாளம் காணப்பட்டவங்க. அவங்களோட ஒப்பிடும்போது இவனுக்கும் வில்லன் வேஷம்தான் சரியா இருக்கும்னு நினைச்சுட்டாங்க. அதுக்காக நான் ஏன் வருத்தப்படப் போறேன். ஆனா இங்கே ஹீரோன்னா ஒரு மதிப்பு, வில்லன்னா ஒரு மதிப்பு, காமெடி நடிகன்னா ஒரு உயரம்னு பார்க்குறதுதான் தப்பு. அந்தக் கண்ணோட்டம் மாறினா நல்லா இருக்கும்னு தோணுது.

இத்தனை ஆண்டு கால ஓட்டத்தில் நடிப்பைத் தவிர மற்ற எதிலும் உங்களுக்கு ஆர்வம் இல்லாமல் போனது ஏன்?

இன்னைக்கு என்னைப் பிடிக்காதவங்ககூட, ‘நல்ல நடிகன்பா.. ராதாரவி’ன்னு சொல்றதைக் கேட்டிருக்கேன். நடிகர் ரஜினிகாந்த் 25 வருஷங்கள் உழைத்ததாலதான் சூப்பர் ஸ்டாரா உருவாக முடிந்தது. 30 வருஷங்கள் யோசித்துக்கொண்டே இருப்பதால்தான் கமல் இங்கே இருக்கிறார். நமக்கு நல்லா தெரிந்த விஷயத்தைச் சரியா செய்தாலே போதும்னு எனக்குத் தோணுச்சு.இதுலயே நான் இன்னும் நீந்திக் கரை சேரலன்னு நினைக்கிறேன்.

ஆனாலும், ரொம்ப நாட்களுக்கு முன்ன மனசுக்குள்ள விழுந்த இரண்டு கதைங்க அப்பப்போ எட்டிப்பார்த்துக்கிட்டே இருக்கும். சமீபத்துல நண்பர் ஒருத்தர்கிட்ட சொன்னேன். நல்லா இருக்கேன்னு சொன்னதோட, நீங்களே இயக்கலாம்னும் சொன்னார். அப்பப்போ சின்ன சின்ன வொர்க் பண்ணியிருக்கேன். இப்போ அந்த வேலையை முழுமையா கையில எடுப்போம்னும் இருக்கேன்.

நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் வர உள்ளது. மீண்டும் இதே இளைஞர் கூட்டணி வந்தால் நல்லது என்று கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறாரே?

நான் தேர்தலில் நின்ற காலகட்டத்தில் எனக்கு ஆதரவாகப் பேசியவர் இந்த கமல்ஹாசன். அதுவே ஒரு காலகட்டத்தில் ராதாரவி ஒரு வில்லன் நடிகன். அவரைப் போய் நாம ஏன் தலைவர்னு கூப்பிடணும்னு நினைத்து அப்படியே பின்வாங்கவும் செய்தவர். என்னைத் தலைவராகக் கூப்பிட மனமில்லாமலேயே அப்படிச் செய்தவர். இன்னைக்கு நாசரை முன்மொழிந்து வருகிறார். நாசர் என்ன செய்கிறார், பேசுகிறார் என்பது உங்க எல்லோருக்குமே தெரியும். எதுவாக இருந்தாலும் அமைதியாக நின்றுகொண்டு பொன்வண்ணனைப் பேச வைக்கிறார். 

ஜே.கே.ரித்தீஷ்  பணம் கொடுத்ததால் ஜெயித்தார்கள். கமல்ஹாசனும் அழைத்து அவரோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இப்போ ஏன் ஜே.கே.ரித்தீஷை அழைத்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லை. இதெல்லாம் பேசினால், ‘ராதாரவி வம்புக்கு வருகிறார்?’ என்பார்கள். நாங்கள் 30 வருஷங்கள் நடிகர் சங்கத்துல சர்வீஸ் செய்திருக்கிறோம்.

இனி எதுக்கு எங்களுக்குப் பதவி. நடிகர்களை நீக்குவதுதான் நடிகர் சங்கத்தோட வேலையா, என்ன? அதைத் தானே இப்போது அவர்கள் செய்து வருகிறார்கள். அதற்கு கமல்ஹாசனும் துணை நிற்கிறார் என்பது வேடிக்கையாக இருக்கிறது. முன்னமாதிரி கோபம் உள்ளவனாக இருந்தால் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருந்திருக்க மாட்டேன்.

உங்கள் குடும்பத்திலிருந்து யாரையும் சினிமாவுக்கு அனுமதிக்கவில்லையே ஏன்?

நடிகர்களை நாம உருவாக்கவோ கொண்டுவரவோ முடியாது. பி.காம் படித்த ஒரு பையன் அக்கவுண்டெண்ட் பணிக்குப் போகிறான். அதுவே பி.ஏ படித்த ஒருவனுக்கு ஜனாதிபதி சிபாரிசு இருக்கிறது என்றால் அதைவிடவும் பெரிய வேலைக்குப் போகிறான். ஆளுங்கட்சி நினைத்தால் தனக்குப் பிடித்த யாரை வேண்டுமானாலும் ராஜ்யசபா எம்.பியாக்க முடிகிறது.

இந்த மாதிரியெல்லாம் சிபாரிசு எதுவும் சினிமாவுக்கு எடுபடாது. அதுவாக வரணும். அவர்களாக அமைத்துக்கொள்ளணும். என் பையன் ஃபண்டிங் பிசினெஸ்ல நல்லபடியா வேலை பார்க்கிறான். அதுல அவனுக்கு மகிழ்ச்சி. அப்பறம் என்ன? அது போதுமே.

உங்கள் அப்பாவுடைய வாழ்க்கை வரலாறு படமாகிறதே?

ஆமாம். என் தங்கை மகன்தான் அந்தப் படத்தை எடுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறான்.‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா அல்லது ராதா இது ரெண்டுல ஒண்ணுதான் படத்தோட பேர். இதுல நீங்கதான் எம்.ஆர்.ராதா கேரக்டர்ல நடிக்கிறீங்களான்னு சிலர் கேட்கிறாங்க. ஏதாவது ஒண்ணு செய்வேன். அது இன்னும் முடிவாகவில்லை.

வீரபாண்டிய கட்டபொம்மன் கேரக்டர்ல அவர் வாரிசா நடித்தார். வ.உ.சி. கதாபாத்திரத்துல அவங்க குடும்பத்துல இருந்து யாரும் நடிக்கலையே. அந்த மாதிரிதான் இதுல வேறு யாராவது நடிப்பாங்க. என் தங்கச்சி மகனும், ‘பக்கபலமா இருக்கணும் அங்கிள்!னு சொல்லியிருக்கான். இந்தப் பட உருவாக்கத்தோட பின்னணியில என்னோட பங்களிப்பு பெரிசா இருக்கும்.  

‘ஜுங்கா’ வுக்குப் பிறகு எந்தெந்தப் படங்களில் நடித்து வருகிறீர்கள்?

கடந்த வாரம் வெளியான ‘மணியார் குடும்பம்’ பார்த்திருப்பீங்க. அடுத்தடுத்து ‘வட சென்னை’, ‘ஆண் தேவதை’, ‘சர்கார்’, ‘கொரில்லா’  என வரிசையா இருக்கு.  இந்தப் பேட்டிக்கு அப்பறம் இன்னைக்கு கூட ரெண்டு இயக்குநர் கதை சொல்ல வர்றாங்க. நடிக்கிறதுதானே நமக்கு வேலை.  இதோ வயசு 65 ஆகிடுச்சு. ரசம் சாதத்துக்கு வந்துட்டோம். அடுத்து மோர் சாதம். அப்படியே ஓடுற வரைக்கும் ஓடிக்கிட்டே இருக்க வேண்டியதுதான் தம்பி.

படங்கள்: எல் சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x