Last Updated : 20 Aug, 2018 11:19 AM

 

Published : 20 Aug 2018 11:19 AM
Last Updated : 20 Aug 2018 11:19 AM

ஆலோசகரை மதிப்பிடுவது எப்படி?

உங்களுடைய முதலீட்டை கையாளுவதற்கு நிதி ஆலோசகரை வைத்திருக்கிறீர்களா? இல்லை ஆலோசகரை நியமனம் செய்யும் திட்டம் இருக்கிறதா? ஒரு வேளை அப்படி இருந்தால் எந்த அடிப்படையில் ஆலோசகரின் செயல்பாட்டினை மதிப்பீடு செய்வீர்கள்.

இந்த கட்டுரையில் முதலீட்டு ஆலோசகரை எப்படி மதிப்பிடுவது என்பது குறித்து பார்ப்போம். முதலீட்டு ஆலோசகரை எப்படி மதிப்பிடுவது என்பதை புரிந்து கொண்டால் உங்களுக்கு ஏற்ற ஆலோசகரை நியமனம் செய்துகொள்ள முடியும்.

உதாரணத்துக்கு உங்களது குழந்தையை வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் படிக்க வைக்க திட்டமிடுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இதற்கு இரண்டு விஷயங்களை முடிவு செய்ய வேண்டும். முதலாவது உங்களால் மாதம் எவ்வளவு சேமிக்க முடியும்,  அந்த தொகைக்கு எவ்வளவு வருமானம் கிடைத்தால் வெளிநாட்டில் படிக்க வைக்க முடியும் என்பதை முதலில் திட்டமிட வேண்டும். 

ஆண்டுக்கு 9 சதவீதம் (வரிக்கு பிறகான வருமானம்) கிடைத்தால்தான் நீங்கள் நிர்ணயம் செய்யும் இலக்கினை  அடைய முடியும். அப்படியானால் இந்த 9 சதவீதம்தான் குறைந்தபட்சம் ஏற்றுக்கொள்ள கூடிய வருமானம் ஆகும்.

உங்கள் இலக்கினை அடைய வேண்டும் என்றால் ஆண்டுக்கு 9 சதவீத வருமானம் கிடைத்தாக வேண்டும். இடைப்பட்ட காலத்தில் எந்த ஒரு ஆண்டிலும் 9 சதவீதத்துக்கு வருமானம் குறைந்தால் உங்கள் இலக்கினை அடைய முடியாது.

பொதுவாக பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தையில் உங்களது முதலீடு பிரித்து முதலீடு செய்வதற்கு உங்கள் ஆலோசகர் பரிந்துரை செய்வார். கடன் சந்தையில் ஆண்டுக்கு 7 சதவீதம் வருமானம் ( 20 சதவீத மூலதன ஆதாய  வரி) மற்றும் பங்குச்சந்தையில் 12 சதவீத வருமானம் (10 சதவீத நீண்ட கால மூலதன ஆதாய வரி) கிடைக்கும் பட்சத்தில் சராசரியாக 9 சதவீத வருமானம் கிடைக்கும்.

மாதந்தோறும் நீங்கள் செய்யும் முதலீட்டில்  பங்குச்சந்தையில் 65 சதவீதமும், கடன் சந்தையில் 35 சதவீதமும் முதலீடு செய்ய வேண்டும் என நீங்களும் உங்கள் ஆலோசகரும் ஒரு உடன்பாட்டுக்கு வருகிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.

உங்களது மொத்த முதலீடும் பிக்ஸட் டெபாசிட்டில் இருந்தால் என்ன வருமானம் கிடைக்கும், மொத்த முதலீடும் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் இருந்தால் என்ன வருமானம் கிடைக்கும் என்பது குறித்து ஆலோசகரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த உதாரணத்தில் பங்குச்சந்தை சார்ந்த முதலீட்டில் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது என்பதை பொறுத்து ஆலோசகரை மதிப்பிட வேண்டும்.

ஆல்பா குறியீடு

நீங்கள் இருவரும் நிர்ணயம் செய்த வருமானத்தைவிட கூடுதலாக கிடைக்கும் வருமானம்தான் ஆல்பா குறியீடு என அழைக்கிறோம். ஆலோசகரை மதிப்பிடுவதற்கான குறியீடு. இந்த குறியீட்டை அடிப்படையாக ஆலோசகரை மதிப்பிடலாம்.

மியூச்சுவல் பண்ட் மேலாளரை மதிப்பிடுவதும், முதலீட்டு ஆலோசகரை மதிப்பிடுவதும் வெவ்வேறு ஆகும். உதாரணத்துக்கு லார்ஜ் கேப் பண்ட்  ஆண்டுக்கு 14 சதவீத வருமானம் கொடுக்கிறது என வைத்துக்கொள்வோம். இவரை மதிப்பிடும்போது லார்ஜ் கேப் குறியீட்டின் வருமானத்துக்கும், பண்டின் வருமானத்துக்கும் இடையே எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்று பார்ப்போம். நிப்டி 50 குறியீடு 12 சதவீதம் வளர்ந்திருக்கிறது என்றால் பண்ட் மேனேஜரின் ஆல்பா குறியீடு 2 சதவீதமாகும்.

ஆனால் இதே அளவினை உங்களது ஆலோசகருக்கு பொருத்த முடியாது. உதாரணத்துக்கு நிப்டி குறியீடு 6 சதவீதம் வருமானம் கொடுக்கிறது. உங்களது ஆலோசகர் 8 சதவீதம் வருமானம் கொடுத்திருக்கிறார் என்றால் 2 சதவீதம் கூடுதல் வருமானம் கொடுத்திருக்கிறார் என எடுத்துக்கொள்ள முடியாது. உங்களுக்கு தேவையான வருமானம் என்பது 9 சதவீதம். அதனால் இண்டெக்ஸை விட அதிக வருமானம் கிடைத்தாலும் அதனை ஒரு அளவீடாக ஏற்றுக்கொள்ள முடியாது.

உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை உங்கள் ஆலோசகர் நிறைவேற்றினாரா என்பது முக்கியம்.

- portfolioideas@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x