

வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளும் ஆண் குழந்தைகளும் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்றால், அந்த வீட்டில் இருக்கிற பெரியவர்கள்தான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன் வீடுகளில் மனைவியைக் கணவன் ‘டி’ போட்டு அழைப்பது இயல்பு. ஆனால், என் அப்பா என் அம்மாவை ராஜலட்சுமி என்று பெயர் சொல்லிக்கூடக் கூப்பிட மாட்டார். மேடம் என்றுதான் கூப்பிடுவார். “மேடம் இங்கே வா, மேடம் காபி கொண்டு வா” என்பார். கோபம் வந்தாலும், “என்ன மேடம் இப்படிப் பண்ணிவிட்டாய்?” என்று கேட்பார். ஆனால், மேடம் என்கிற மரியாதை குறையாது. அப்பா, அம்மாவை மதிக்கிறார் என்கிற உணர்வு வர வர சகோதரன், சகோதரியை மதிப்பான். அந்த வீட்டில் இருக்கிற பெண்கள் எல்லாம் மதிக்கப்பட வேண்டும் என்றால், வீட்டில் இருக்கிற பெரியவர்கள் அனைவரும் பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்.
வீட்டில் மரியாதையுடன் கூடிய கண்ணோட்டம் இருந்தால்தான் அந்த வீட்டுப் பெண் பருவம் அடையும்போது கேலியோ, மட்டமான உணர்வோ இருக்காது. பருவவயதில் குழந்தைகளின் மனதுக்குள் இருக்கிற குழப்பங்கள், ஆசாபாசங்களைப் புரிந்துகொள்ளப் பெற்றோர் உதவவேண்டும். இணையமும் யூடியூபும் உதவுவதைவிட, அரையும்குறையுமாகத் தெரிந்துகொண்ட நண்பர்கள் உதவுவதைவிடப் பெற்றோர் நிச்சயமாக உதவ முடியும்.