

ஊண், உறக்கமின்றி எங்களுக்காக உழைத்துக்கொண்டிருப்பவர் என் அம்மா உமா. அம்மா, அப்பா, நான், தங்கை இதுதான் எங்கள் குடும்பம். எங்களுடையது விவசாயக் குடும்பம். என் அப்பா ஒரு சிறந்த ‘குடி’மகன். அதனாலேயே எங்கள் சுற்றத்தார், உறவினர்கள் மத்தியில் நிறைய அவமானங்களை அம்மா சந்தித்தார். அப்போதெல்லாம் எனக்கும் என் தங்கைக்கும் மிகவும் கஷ்டமாக இருக்கும். வறுமையும் அப்பாவின் குடிப்பழக்கமும் எங்களை ஆட்டிப்படைக்க, குடும்பத்தைக் கரைசேர்க்க ஒற்றை ஆளாக என் அம்மா போராடினார். தன் சோகங்களை மறைத்துக்கொண்டு, எங்களைக் காப்பாற்ற வைராக்கியத்துடன் தன் சக்திக்கு மீறி உழைத்தார். தினமும் விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் அம்மாவின் பொழுது தொடங்கிவிடும்.
குளித்துவிட்டு வந்து சாமி கும்பிடுவார். பிறகு, வாசலைப் பெருக்கி, தண்ணீர் தெளித்துக் கோலம் போடுவார். ஆடு, மாடுகளின் தொழுவத்தைக் கூட்டிப் பெருக்கி, குப்பைக்குழியில் கொட்டிவிட்டு வந்து, பசுக்களுக்குத் தவிடு போட்டுப் பால் கறப்பார். அதன் பிறகு சமையல் வேலையை ஆரம்பிப்பார். அடுத்து, தீவனப் புல் அறுத்து வந்து ஆடு, மாடுகளுக்குப் போட்டுவிட்டு, வயலுக்குச் சென்று விவசாய வேலைகளைச் செய்ய ஆரம்பித்தால் மாலை ஐந்து மணிக்குத்தான் வீடு திரும்புவார்.