

பெண்களின் அரசியல் பங்களிப்பை, பொதுவெளிச் செயல்பாடுகளைப் பெரிய அளவில் நிகழ்த்திக் காட்டியதில் காந்திக்கு முக்கியப் பங்கு உண்டு. காந்தியோடு இணைந்து பணியாற்றிய பெண்களின் அனுபவங்களை எழுதலாம் என்கிற யோசனையோடு, காந்திய அகராதி என நான் விரும்பி வாசிக்கும் ‘The detailed chronology of Mahatma Gandhi’ (தொகுப்பு: C.B.Dalal) புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தேன். அதில் 1940 வருட நிகழ்ச்சி நிரலில் ஜூலை மாதத்திற்கான அடிக்குறிப்பில் தலால் ஆர்வமூட்டும் ஒரு குறிப்பைத் தந்திருந்தார். கிளேர் ஷெரிடன் வடிவமைத்து அளித்திருந்த காந்தியின் மார்பளவுச் சிலை பம்பாயின் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் மியூசியத்திற்கு அளிக்கப்பட்டது என அந்த அடிக்குறிப்பு கூறியது. ஆர்வத்துடன் கிளேர் ஷெரிடன் குறித்த குறிப்புகளைத் தேடத் தொடங்கினேன்.
கிளேர் ஷெரிடன் (1885-1970), ஒரு வகையில் வின்ஸ்டன் சர்ச்சிலின் உறவினர். மிகச் சிறந்த சிற்பி. உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணித்து அன்றைய காலக்கட்டத்து முக்கிய வரலாற்று ஆளுமைகளைச் சிலையாக வடித்தவர். பல நாடுகளுக்கும் பயணித்து சிலைகள் வடிவமைத்த தன் அனுபவங்களை அவர் புத்தகங்கள் ஆக்கியிருக்கிறார். அவருடைய பல புத்தகங்களில் ஒன்றான ‘To the four winds’ என்கிற புத்தகத்தின் ஓர் அத்தியாயம், காந்தியை கிளேர் சந்தித்ததையும் அவரது சிலை வடித்த அனுபவத்தையும் விவரிக்கிறது. மிக ஆர்வமூட்டும் பகுதி அது.