

நாகர்கோவிலுக்குப் போய்க்கொண்டிருந்தபோது, பேருந்தில் அருகே பயணித்த நடுத்தர வயதுப் பெண் ஒருவர் கைபேசியில் அவரோடு எதிர்முனையில் பேசுபவரோடு அடிக்கடி ‘மேல் சீலையைப் போட்டுட்டு வெளியே போ’ என்று சொல்லிக்கொண்டேயிருந்தார். பேசுவதைப் பார்க்கையில் மகளாக இருக்கலாம் என்றே தோன்றியது. கைபேசியை வைக்கும்போதும் பதற்றமான முகபாவத்தில் ‘மேல் சீலையைப் போட்டுட்டுப் போ’ என்று சொல்லிவைத்தார். இந்த வார்த்தைகளின் வலியுறுத்தலில் பாதுகாப்பற்ற ஒரு சமூகத்தின் அச்சுறுத்தல் இல்லாமல் இல்லை.
பத்துப் பதினைந்து வயதிலே, காதில் விழும் ஒரு சொல்லாடல் இதுவாக இருப்பதை நானும் ஓர்மித்தேன் (நினைத்தேன்). வீட்டைவிட்டு வெளியே கிளம்பும் போதெல்லாம் மறக்காமல் ஒரு சீலைத் துண்டை, ‘சும்மா தோளுல போடு’ என்று தந்துவிடுவார்கள். அந்தச் சீலையின் முனை சிறிது சறுவினாலும், ‘நீ என்ன ஒழுக்கங்கெட்ட வாழ்வு வாழுற?’ என்று முகம் பார்த்துச் சொன்னவர்கள் அதிகம். ஆலயத்திற்குப் போகையில் தலையின் முக்காடு ஒழுங்காக அமையவில்லையென்றால் அதையும் ஒழுக்க மீறலாகவே எழுதினார்கள்.