

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கர்ப்பம் தரிப்பது முக்கியமான காலக்கட்டம். மகிழ்ச்சியளிக்கும் பயணம். ஆனாலும், எதிர்பாராதவாறு உடல்நலத்துக்குப் பல சவால்களை இது கொண்டுவரக்கூடும். இந்தியாவில் கர்ப்பகால நீரிழிவு (GDM) என்பது கர்ப்பம் தரித்த நான்கு பெண்களில் ஒருவரைப் பாதிக்கிறது.
பலநேரத்தில் இப்பாதிப்பு கண்டறியப்படுவதில்லை அல்லது குறைத்து மதிப்பிடப்படுகிறது. அறிகுறிகள் எதுவும் வெளிப்படாமல் கர்ப்பகால நீரிழிவு ஏற்படுவதே இதற்குக் காரணம். இதனால், கர்ப்பம் தரித்த தாய்க்கும் வளரும் குழந்தைக்கும் ஆபத்து அதிகம். எனவே, இந்தியாவிலுள்ள ஒவ்வொரு பெண்ணும் அறிந்திருக்கவேண்டிய அச்சுறுத்தல் இது.
எப்படிப் பாதிக்கிறது? - பொதுவாகக் கர்ப்பம் தரித்த 24ஆவது வாரத்தையொட்டி நிகழ்கிற நீரிழிவின் ஒரு வகை இது. வளர்ச்சியடையும் கருவின் காரணமாக உணவுத் தேவை அதிகரிக்கும்போது, அதை எதிர்கொள்ளப் போதுமான இன்சுலினை உற்பத்திசெய்ய உடலால் இயலாமல் போகலாம். பிரசவத்துக்குப் பிறகு, கர்ப்பகால நீரிழிவு பாதிப்பு மேலும் தொடரலாம் அல்லது தொடராமலும் போகலாம். எதுவாக இருந்தாலும், இது ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு பெரும்பாலான நேரத்தில் நீண்டகாலம் நீடிக்கக் கூடியது.