

சிறு வயதில் கவண் வில் பயன்படுத்தி மரத்தில் அமர்ந்திருக்கும் காக்கை, குருவிகளை விரட்டியிருப்போம். அதேநேரம், இரையைப் பிடிக்கச் சிலந்தி தனது வலையையே ஒரு கவண் வில்போல பயன்படுத்துகிறது, தெரியுமா? அதுமட்டுமல்ல இயற்கையிலேயே சிலந்தி ஒரு தேர்ந்த உயிர் வேதியியலாளராகச் (natural bio chemist) செயல்பட்டு, தனது வலையை உறுதித்தன்மை, மீட்சித்தன்மை, கூழ்தன்மை எனப் பல்வேறு சிறந்த பண்புகளுடன் உருவாக்குகிறது.
ஹுக்ஸ் விதியும் சுருள் வில்லும்: பள்ளிப் பாடப்புத்தகத்தில் சுருள்வில் பற்றிப் படித்திருப்போம். சுருள்வில்லை நன்றாக அமுக்கினால் அல்லது விரித்தால் அது மீட்சி நிலை ஆற்றலைத் (elastic potential energy) தனக்குள்ளே தேக்கி வைத்துக்கொள்கிறது. அதன் மீது உள்ள அழுத்தத்தை விடும்போதுதான் தேக்கி வைத்திருந்த மீட்சி நிலை ஆற்றலை இயக்க ஆற்றலாக மாற்றி, அதனோடு தொடர்பில் உள்ள நிறைக்கு இயக்கத்தை கொடுக்கிறது.