

பழமையான மரத்தின் கிளைகளும் வேர்களும் ஒன்றுசேர்ந்து வியாபித்திருப்பது போன்ற பின்னணி. இருபுறமிருக்கும் அலமாரிகளில் ஒரே அளவிலான கண்ணாடிக் குப்பிகள், சிறு பாட்டில்கள்; அவற்றில் நிறைந்திருக்கும் வாசனைத் திரவியங்கள், நறுமணத் திரவிய மாதிரிகள். கையிலிருக்கும் அட்டைகளில் அவற்றைத் தெளித்தும் தோய்த்தும் நுகர்ந்து சிலாகிக்கும் இளைய தலைமுறையினர். இப்படித்தான் இன்னோர் உலகைக் கடைவிரிக்கிறது ‘யூசுஃப் பாய் பெர்ஃபியூம்ஸ்’.
துபாயில் பிரபலமான பெர்ஃபியூமராகப் புகழ்பெற்ற யூசுஃப் பாய், அண்மையில்தான் சென்னை நுங்கம்பாக்கத்தில் தனது கிளையைத் திறந்திருக்கிறார். ஆடைகள், அணிகலன்கள், காலணிகள், வாகனங்களுக்கு அடுத்தபடியாக இளையோரின் விருப்பத்திற்குரியதாக ‘பெர்ஃபியூம்’ மோகம் உள்ளதை உணர்ந்தவராக இருக்கிறார்.