

ஏஐ சாட்பாட்கள் மனிதர்களைப் போலவே பேசுவதில் தேர்ச்சி பெற்றிருக்கின்றன. அதற்காக அவற்றை மனிதத்தன்மை கொண்டதாக நினைப்பது பிழை. அதைவிடத் தவறு, அவற்றிடம் மனம் திறந்து பேசுவது. என்றாலும், சாட்பாட்களிடம் இப்படிப் பேசுபவர்கள் அதிகம் இருக்கின்றனர் என்பதுதான் கவலை அளிக்கும் சங்கதி.
இளைய தலைமுறையினரில் பலர் சாட்பாட்களிடம் ஜாலியாக பேசிப் பொழுதுபோக்குவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இன்னும் சிலர் சாட்பாட்களுக்கு பெயர்கூட சூட்டுவதுண்டு. ஏஐ சாட்பாட் சேவை அளிக்கும் மேடைகள் சில, பயனாளிகள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற குணாதிசயமும் ஆளுமையும் கொண்ட சாட்பாட்களை உருவாக்கிக் கொள்ளவும் வழிசெய்கின்றன.