

நம் நாட்டில் கோழிகளுக்கு அடுத்து, முட்டைகளுக்காக வாத்துகள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், செங்கல்பட்டு, நாமக்கல், காஞ்சிபுரம், வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வாத்து வளர்ப்பு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. வாத்துகள் பெரும்பாலும் எங்கெல்லாம் மேய்ச்சல் நிலம், குளம், குட்டைகள் இருக்கின்றதோ, அங்கெல்லாம் வாத்துகளை ஓட்டிச் சென்று மேய்த்து வளர்க்கும் முறை நம் மாநிலத்தில் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா முதலிய அண்டை மாநிலங்களிலும் காணப்படுகிறது.
விவசாயம் சார்ந்த ஒருங்கிணைந்த பண்ணையத்திலும் வாத்துகளை வளர்க்க முடியும்.வாத்துகள் கோழிகளை விட அதிக முட்டையிடும்
திறன் உடையவை. வாத்து முட்டையின் எடை கோழி முட்டையின் எடையை விட 15 முதல் 20 கிராம் அதிகமாக இருக்கும். கோழிகளுக்கு கொட்டகை அமைப்பதுபோல அதிகம் செலவு செய்து வாத்துகளுக்கு கொட்டகைகள் அமைக்கத் தேவையில்லை. இரவில் வாத்தை அடைத்து வைப்பதற்கு சிறு மூங்கில் பட்டி இருந்தால் போதுமானது.