

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் நடத்திய நிறுவன அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பில் ஒரு போட்டி வைத்தேன். அந்த அறையில் உள்ள நீல நிற பொருட்களை அதிக அளவில் சுட்டிக்காட்டுபவரே வெற்றியாளர் என்று அறிவித்தேன். சட்டை, திரைச்சீலை, கண்ணாடி பிரேம், மேசை விரிப்பு, நாட்குறிப்பு அட்டை, ஒருவர் அணிந்திருந்த காலுறைகள், புடவைத் தலைப்பில் இருந்த மயில் கழுத்து, கை கடிகாரத்தின் பட்டை என தேடித் தேடி, போட்டி போட்டுக்கொண்டு சொன்னார்கள். சிலர் நான்கு கண்டுபிடித்தார்கள், வேறு சிலர் ஏழு. ஒருவர் மட்டும் 25-க்கும் அதிகமாக சொல்லி மற்றவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
அந்த அறைக்குள்ளாகவேவா? வேறு எவரும் சொல்லாதவை அவ்வளவா? அது எப்படி என்று வியப்பாக இருக்கிறதா? அவர் அந்த அறையில் இணைய இணைப்புடன் இருந்த கணினியில், தேடுபொறியில் (கூகுள்) ‘நீல நிறத்திலான பொருட்கள்’ எனச் சுட்டினார். வந்து விழுந்தவற்றைக் காட்டினார். பக்கம் பக்கமாக காட்டிக் கொண்டேயிருந்தார். வெற்றி பெற்றார்.