

இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக விவாகரத்து என்பது சமூகரீதியான அவமானமாகக் கருதப்பட்டது. ‘திருமணம் புனிதமானது; கடவுளின் முன்னால் எடுக்கப்படும் வாழ்நாள் வாக்குறுதி’ என்பது மக்களின் எண்ணம். எனவே, சடங்குகளாலும் சம்பிரதாயங்களாலும் கட்டப்பட்டிருக்கும் மனித மனத்தால் திருமண முறிவை ஏற்க முடியவில்லை. இந்தியத் திருமணங்கள், ஆணாதிக்கத்தை வெளிப்படையாகவும் கண்ணுக்குத் தெரியாமலும் ஆதரித்துப் பாதுகாக்கின்றன. திருமணம் என்னும் கருத்தாக்கத்தின் மூலம் பெண்களை அடக்கிக் கட்டுப்படுத்துவதோடு ஒடுக்கப்பட்டவர்களாகவும் சக்தியற்றவர்களாகவும் உணரவைக்கின்றன.
குடும்ப அமைப்புக்கும் சமூகத்துக்கும் பயப்பட்ட பெண்கள், விருப்பமற்ற தங்களின் துணையைச் சகித்துக்கொண்டு, கொடுமையான வாழ்க்கைக்குத் தீர்வு காணாமல், தங்களுக்குள் புழுங்கியபடி வாழ்நாளைக் கழித்தனர். எத்தனையோ மன உளைச்சல்களைச் சந்தித்தபோதும் திருமணம் என்னும் லட்சுமணக் கோட்டைத் தாண்டும் துணிச்சலைப் பெண்கள் பெறவில்லை. நிம்மதியும் மகிழ்ச்சியுமற்ற வாழ்க்கையை மாற்ற விவாகரத்து எனும் தீர்வை நோக்கி நகரவிடாமல் சமூகமும் குடும்பமும் பெண்களை அழுத்தின.