எனது ‘வெட்டிவேலை!’ | ஆண்கள் ஸ்பெஷல்
கல்யாணம் ஆன புதிதில் மனைவியிடம் என் அம்மா, ‘அவனுக்கு வெந்நீர்கூட வைக்கத் தெரியாது. பார்த்துக்கோ அம்மா’ என்றார். இந்தக் காலமாக இருந்தால், ‘நல்லாத்தான் வளர்த்திருக்கீங்க பிள்ளையை’ என்று நேரிலேயே சொல்லி இருப்பார் என் மனைவி. ஆனால், அன்று ‘இதில் என்ன பெருமை?’ என்பது போலப் பார்த்தார். நான் வங்கி வேலைக்குப் போகும் பெருமையில் அடுப்படிப் பக்கமே செல்வதில்லை. எல்லாம் கைக்கு வந்துவிடும். ஆனால், பணி ஓய்வுக்குப் பிறகு, என் மனைவிக்கும் உடல்நலம் குன்றியதால் ஏதாவது உதவலாமே என்று நினைத்தேன். பந்தி பரிமாறும் வேலையில் இலைக்கு அப்பளம் போடுவதுதான் எளிய வேலை. அது போலத் துலக்கி வைக்கப்பட்ட பாத்திரங்களை அடுக்கும் வேலையைச் செய்யத் தலைப்பட்டேன்.
பாராட்டு கிடைத்திருக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. ‘அது அதை அதற்குரிய இடத்தில் வைக்கவேண்டும். ஏனோதானோ எனச் செய்வதாக இருந்தால் செய்ய வேண்டாம். ஒட்டிக்கு ரெட்டி வேலை (ஒன்றுக்கு இரண்டு வேலை) வெட்டிவேலை’ என்கிற அர்ச்சனை காதில் விழுந்தாலும் ‘போற்றுவோர் போற்றட்டும்; தூற்றுவோர் தூற்றட்டும்; எது வரினும் நில்லேன். என் கடன் பணி செய்து கிடப்பதே’ எனத் தொடர்கிறது இந்த அணிலின் பணி. வீட்டுவேலைகளைப் பகிராவிட்டாலும் கொஞ்சமாவது பங்கேற்பது மனநிறைவு அளிக்கத்தான் செய்கிறது. என்னைவிட இன்றைய இளைஞர்கள் முதிர்ச்சியோடு முன்னணியில் இருப்பது குற்றவுணர்வை உருவாக்குகிறது.- பொன்.முத்துக்குமார், பணகுடி.
