

மிகவும் அந்தரங்கமானது என நம்பப்படும் விஷயத்தைப் பற்றித்தான் இந்த வாரம் யோசிக்கப்போகிறோம். வீட்டில் இருக்கும் ஆண்களும் கூச்சப்படாமல், அசிங்கப்படாமல் இதைப் படித்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன். பெண் குழந்தைகளின் வளர்ச்சியில் பருவம் அடைவது என்பது ஒரு நிலை. ஒரு குழந்தைக்கு மாதவிடாய் ஏற்படும்போது அந்தக் குழந்தையின் மனம் எப்படிச் சிந்திக்கும், அவளைச் சுற்றியுள்ள குடும்பம், நண்பர்கள், சமுதாயம் எப்படிப் பார்க்க வேண்டும் என்பதைப் பற்றி நாம் யோசிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம்.
ஒரு பெண்ணின் வளர்ச்சி சரியாக இருக்கிறது என்பதை உணர்த்துவதுபோல் நம் உடல் மென்மையாக முணுமுணுக்கும் விஷயம்தான் மாதவிடாய். ஏனோ தெரியவில்லை இதை நாம் கொச்சைப்படுத்தி அசிங்கப்படுத்திவிட்டோம். மாதவிடாய் ஆன பெண்களைப் பார்க்கக் கூடாது, அவர்களது குரலைக் கேட்கக் கூடாது என்பதையெல்லாம் சிறுவயதில் கேட்டிருக்கிறேன். இன்று நிலை எவ்வளவோ மாறினாலும் சில இடங்களில் மாதவிடாய் நாள்களில் பெண்களைத் தனிமைப்படுத்தி ஒதுக்கிவைப்பது நடக்கத்தான் செய்கிறது.