

நாம் எங்காவது வழிமாறிவிட்டால் உடனே திறன்பேசியில் ஜி.பி.எஸ். (புவி இடங்காட்டி) உதவியை நாடுகிறோம். சரி, அங்குமிங்கும் அலைந்து திரிந்து தேனெடுக்கும் தேனீக்கள் வழிமாறிவிட்டால் என்ன செய்வது? பரிணாம வளர்ச்சி அதற்கு ஓர் இயற்கையான புவி இடங்காட்டியைக் கொடுத்திருக்கிறது. சூரிய ஒளியின் தளவிளைவுப் பண்புதான் (polarization of sun light) அந்த இடங்காட்டி.
ஒளியின் தளவிளைவு: நாம் காணும் வானவில்லின் ஏழு வண்ண ஒளி, ரேடியோ அலை, நுண் (மைக்ரோ) அலை, எக்ஸ்ரே கதிர் என எல்லாவித ஒளியும் மின்காந்த அலைகளே. ஒளிக்கு மின்புலமும் காந்தப்புலமும் உண்டு. இவை இரண்டும் எப்போதும் ஒன்றுக்கு மற்றொன்று செங்குத்தாக இருக்கும். சூரிய ஒளியினுடைய மின்புலத்தின் திசை எப்போதும் ஒரே திசையில் இருக்காது. அது சீரற்ற முறையில் மாறிக்கொண்டிருக்கும்.
ஆனால், வளிமண்டலத்துக்குள் நுழையும் சூரிய ஒளியானது காற்று மூலக்கூறுகளில் மோதிச் சிதறும்போது, அதன் மின்புலம் குறிப்பிட்ட ஒரு திசையை நோக்கி மட்டுமே இருக்கும். ஒளியினுடைய மின்புலத்தின் திசை இப்படி மாறாமல் ஒரே திசையில் மட்டும் இருந்தால், அதைத் தளவிளைவு அடைந்த ஒளி என்கிறோம். அதாவது மின்புலமானது ஒரு குறிப்பிட்ட தளத்திலேயே இருக்கிறது. காற்று மூலக்கூறுகளால் சிதறும் சூரிய ஒளியானது, குறிப்பிட்ட சில திசைகளில் இந்தத் தளவிளைவை அடைகிறது.