

அப்பா பிரியதர்ஷன் தன்னுடைய 100வது படத்தை இயக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறார். அம்மா லிஸ்சியோ 90களின் மல்லுவுட்டில் கனவுத் தாரகை. இந்திவரை தடம்பதித்த இந்த இரண்டு பிரபலங்களின் காதலுக்குச் சாட்சியாகப் பிறந்தவர் கல்யாணி பிரியதர்ஷன். இப்போது, மொழி கடந்த பிளாக்பஸ்டர் படமான ‘லோகா’ யுனிவர்ஸின் சூப்பர்வுமன். ரசிகர்களுக்கோ சந்திரா என்கிற கள்ளியங்காட்டு நீலி.
20 வயதிலேயே சினிமாவுக்கு வந்துவிட்டார். முதலில் ‘கிருஷ் 3’ இந்தி, ‘இருமுகன்’ தமிழ் ஆகிய இரண்டு படங்களில் தயாரிப்பு வடிவமைப்பு, கலை இயக்கம் என உதவியாளராகப் பணிபுரிந்தார். 2017இல் ‘ஹலோ’ தெலுங்குப் படத்தில் கதாநாயகியாக அறிமுகம்.
தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘ஹீரோ’விலும் தாய்மொழியான மலையாளத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக ‘வரனே அவஷ்யமுண்டு’ படத்திலும் அறிமுகமாகி வளர்ந்தார். பிரபலங்களின் வாரிசாக இருப்பது, கல்யாணிக்கு எல்லாவிதங்களிலும் மலர்ப்பாதை அமைத்துக் கொடுத்தது.
அதேநேரம், திரையில் பல துறைகளில் ஈடுபட்டுக் கற்றுக்கொள்ளும் ஆர்வம், நடிப்பிலோ கதாபாத்திரத்தை வெளிப்படுத்துவதில் ஆழம், நீலி போன்ற கதாபாத்திரத்தை மனத்தடையின்றி ஏற்று நடிக்க முன்வந்த துணிவு ஆகிய குணங்கள் அவரைத் தற்போது நட்சத்திரமாக்கிவிட்டன.