

பட்டப் படிப்பை முடித்த பிறகு, வேலை தேடி முதல் முறையாகப் பலவித எதிர்பார்ப்புகளோடும் பயத்தோடும் சென்னைக்கு வந்தேன். ஒரு பிரபலமான துணிக்கடையில் நண்பன் வேலைக்குச் சேர்த்து விட்டான். விடுதியில் இருந்த பலரும் சென்னையின் புகழ்பெற்ற இடங்களைக் குறித்துச் சொல்லச்சொல்ல, எனக்கும் அவற்றை எல்லாம் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது.
ஒரு விடுமுறை நாளில் மாம்பலத்தில் ரயில் ஏறினேன். சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களுக்குச் செல்வதில், ஏனோ ஒரு தயக்கம் இருந்தது. வேறு எங்கே செல்வது என்று யோசித்தேன். மாநிலக் கல்லூரியில் என் சீனியர் ஒருவர் படிப்பது அப்போது நினைவுக்கு வந்தது. அவரைத் தொடர்புகொண்டு பார்க்க வருவதாகச் சொன்னேன். அவரும் எப்படி அவர் இருக்கும் இடத்தை வந்தடைய வேண்டும் என்று கூறினார்.