

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் ‘கிரியேட் - நமது நெல்லை காப்போம்’ இயக்கம் தொடர்ச்சியாக நடத்தி வரும் தேசிய பாரம்பரிய நெல் திருவிழா உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளின் காரணமாக, தமிழ்நாட்டில் இப்போது பாரம்பரிய நெல் வகைகள் பரவலாகி உள்ளன. இயற்கை சாகுபடி முறையில், பாரம்பரிய நெல் வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனினும், போதிய சந்தை வாய்ப்பு கிடைக்காததால், இயற்கை விவசாயிகள் தவிக்கிறார்கள்.
இன்னொரு புறம், இயற்கை விவசாய உணவுப் பொருட்களுக்கு மாநகரங்களில் அதிக வரவேற்பு உள்ளது. அங்குள்ள நுகர்வோர் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். ஆனால், இதன் பலன் விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை. இந்நிலையில் பாரம்பரிய அரிசி உற்பத்தி செய்த விவசாயி – நியாயமான விலை கொடுத்து வாங்க தயாராக இருக்கும் நுகர்வோர் இருவருக்கும் இடையே இடைத்தரகர்கள், வியாபாரிகள் யாரும் இன்றி, நேரடி தொடர்பு ஏற்படுத்த கிரியேட் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.