Last Updated : 07 Aug, 2018 10:22 AM

 

Published : 07 Aug 2018 10:22 AM
Last Updated : 07 Aug 2018 10:22 AM

ஆங்கிலம் அறிவோமே 225: மொழி ஒன்று நாடு இரண்டு!

கேட்டாரே ஒரு கேள்வி

‘Dam it'என்பதைத் திட்டுவதற்குப் பயன்படுத்துகிறார்களே.அணைக்கட்டுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?  ஒருவேளை சொல்லை விட்டுவிடக் கூடாது (அணை கட்ட வேண்டும்) என்றுதான் இதற்குப் பொருளா?" என்று கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர்.

**********************

அது அணைக்கட்டை உணர்த்தும் dam அல்ல.

பொறுத்துக்கொள்ள முடியாத விஷயங்களைக் கேட்கும்போது damn it என்று எரிச்சலை வெளிப்படுத்துவதுண்டு.

Damn என்பது பெரும்பாலும் verb ஆகப் பயன்படுகிறது.To be damned என்றால் இறைவனால் பெரிதும் சபிக்கப்படுவது அல்லது நரகத்தில் தள்ளப்படுவது என்று பொருள்.People who committed suicide are damned to hell.With increasing losses, the company was damned.

மிகவும் எதிர்மறையாக விமர்சனம் செய்வதையும் இப்படிக் குறிப்பிடுவதுண்டு.The book damns the Minister. Damn him for neglecting this.

பேச்சு வழக்கில் damn என்பதைக் கோபம் அல்லது எரிச்சலை வெளிப்படுத்தும் சொல்லாகவும் பயன்படுத்துகிறார்கள். Damn!I completely forgot to buy tablets.

**********************

Canon – Cannon

Canon என்பது திருச்சபை கட்டளைக் கோட்பாடு அல்லது கிறிஸ்தவ ஆலயச் சட்டத்தைக் குறிக்கிறது.பெரிய மாதா கோயிலில் இந்தக் கோட்பாடுகளின்படி கடமையாற்றும் பாதிரியாரையும் இது குறிக்கும்.

பொது ஒழுங்கு அல்லது கட்டளையைக் குறிக்கவும் இந்தச் சொல் பயன்படுகிறது.His appointment violated the canons of fair play.

Cannon என்பதைப் பீரங்கி எனலாம்.

பில்லியர்ட்ஸ் அல்லது ஸ்னூக்கர்ஸில் ஒரு குறிப்பிட்ட பந்தை ஒரு நீண்ட குச்சியின் மூலம் அடித்துப் பிற பந்துகளைக் குழியில் தள்ளுவார்கள். இந்த நீண்ட குச்சியை cue stick என்பார்கள். அதனால் அடிக்கப்படும் பந்தை cue ball என்பார்கள். இந்தப் பந்து அடுத்தடுத்து இரு பந்துகளை அடித்தால் அந்த முயற்சியை (stroke-ஐ) cannon என்பார்கள்.

**********************

“நட்சத்திர உணவகம் ஒன்றில் ஒருவர் ‘check please’ என்று சாப்பிட வந்த வெள்ளைக்காரர் ஒருவர் கேட்டார்.வேடிக்கையாக இருந்தது.சர்வர்தானே வாடிக்கையாளரிடம் பணம் அல்லது செக் கேட்க வேண்டும்?” வாசகர் ஒருவர் இப்படித் தனது வியப்பைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

நம் உணவகங்களில் சர்வர் என்று குறிப்பிடப்படுபவரை நட்சத்திர உணவகங்களில் bearer என்பார்கள்.

Check என்பதைச் சரிபார்த்தல் என்று தமிழில் கூறுவோம். Check the luggage.

ஆனால், காசோலையைக் குறிக்கும் cheque என்ற சொல்லை அமெரிக்காவில் check என்று குறிப்பிடுகிறார்கள்.

காசோலையைக் கொடுத்தால் bearer வாங்கிக் கொள்வாரா என்பது தெரியாது. ஆனால், உணவு சாப்பிட்டால் bearer-ரிடம் check-ஐப் பெற்றுக்கொள்ளலாம்.

சாப்பிட்டு முடித்தவுடன் ‘போதும். பில் கொடுங்க’ என்கிறோம் அல்லவா? இந்த bill என்பதை check என்கிறார்கள்.வேறெங்கே?அமெரிக்காவில்தான்.

அவ்வப்போது வாசகர்கள் சிலர் கேள்வி எழுப்புவதுண்டு.“எதனால் பிரிட்டிஷ் ஆங்கிலமும், அமெரிக்க ஆங்கிலமும் அவ்வப்போது எதிரெதிர் திசையைப் பார்த்துக்கொள்கின்றன?’’ என்று.

அமெரிக்கா (ஒப்பு நோக்கையில்) ஒரு புதிய கண்டம். அங்கே யூதர்கள் பலர் வசிக்கிறார்கள்.ஆசியாவைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஸ்பானியர்கள் இருக்கிறார்கள்.அந்தந்த நாட்டு ஆங்கிலம் அங்கே கொஞ்சம் கலந்துவிடுகிறது. (இந்தியாவில் ‘I talk. He talk. Why you middle middle talk?” என்று ஒருவர் கூறக் கேட்டதுண்டு. I do not know என்பதை“I am not knowing’ என்ற புதிய கோணத்தில் ஒருவர் கூறியதையும் என் செவிகள் ஒருமுறை உள்வாங்கிவிட்டன).

இந்தக் கலவையால்தான் அமெரிக்க ஆங்கிலம் மாறுபடுகிறது.

பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் Motorway என்பதை அமெரிக்க ஆங்கிலத்தில் Freeway என்பார்கள். நாம் எதை Ground floor என்கிறோமோ அது அமெரிக்கர்களுக்கு First floor.

பெர்னார்ட் ஷா இப்படிக் கூறியிருக்கிறார் – “England and America are two countries separated by the same language”.

english 2jpg100 

‘Jingoism என்றாலும் patriotism என்றாலும் ஒன்றுதானே?’

Patriotism என்பது தேசப்பற்று.Jingoism என்பது தேச வெறி.

“என் நாடு வளர்ந்து வரும் நாடு. அது என் தாய் நாடு. அதை நான் மிகவும் நேசிக்கிறேன். அது முன்னேற என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன்’’ என்பது patriotism.

“இது என் நாடு. கல்வி, மருத்துவம், விளையாட்டு, மனிதாபிமானம், ராணுவ வளம் என்று எந்த அளவீட்டை எடுத்துக்கொண்டாலும் என் நாட்டை அடித்துக்கொள்ளவே ஆள் இல்லை. இதில் மாற்றுக் கருத்து கொண்டவர் தேசத் துரோகி’’ என எண்ணுவது Jingoism.

என்றாலும் சில நேரம் இரண்டுக்குமிடையே தெளிவான கோடு கிழிப்பது கஷ்டம்.

‘ரோஜா’ படத்தில் அரவிந்த்சாமி, பற்றி எரியும் தேசியக் கொடியை, தான் எரிந்தாலும் பரவாயில்லை என்று அதன் மீது உருண்டு புரண்டு அணைப்பது எது? ‘சானியா மிர்ஸா ஒரு பாகிஸ்தானியரைக் கல்யாணம் செய்து கொண்டிருப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும்’ என்பது எது? முடிவு உங்கள் கையில்.(மற்றபடி ‘தமிழன் என்றால் 100 பேருக்கு ஷேர் செய்க’ என்பது போன்ற வாட்ஸ்அப் ‘உணர்வை’ இவற்றோடு சேர்த்துக் குழப்பிக் கொள்ள வேண்டாமே).

**********************

போட்டியில் கேட்டுவிட்டால்?

Due to ____________ weather the game was stopped.

a) conducive

b) inclement

c) personable

d) amiable

நல்லது நடப்பதற்கான சரியான சூழலை conducive என்பார்கள். Noisy environment is not conducive to a good sleep.

Personable என்பதும் ஆக்கப்பூர்வமான பொருளைத்தான் கொடுக்கிறது. She is personable என்றால் மகிழ்வையோ மன அமைதியையோ கொடுக்கும் தோற்றம் கொண்டவள் அவள் என்று பொருள்.

Amiable என்றால் இனிமையான அல்லது நட்பான என்று பொருள்.

இவற்றை வைத்துப் பார்க்கும்போது conducive, personable, amiable ஆகிய மூன்று விடைகளுமே கோடிட்ட இடத்தில் பொருந்தவில்லை. ஏனென்றால் சாதகமான, இதமான வெப்ப நிலையில் இருக்கும்போது எந்த விளையாட்டும் நிறுத்தப்படாது.

ஆனால், inclement weather என்றால் அது விரும்பத்தகாத வெப்பநிலையை உணர்த்துகிறது.மழை வருவதுபோல இருக்கலாம்.கடும் வெயிலாக இருக்கலாம்.விட்டுவிட்டுத் தூறல் போடுவதாக இருக்கலாம். இவற்றில் எதுவாக இருந்தாலும் அது inclement weatherதானே. இந்தப் பொருள் வாக்கியத்தில் பொருந்துகிறது.எனவே, சரியான விடை Due to inclement weather the game was stopped என்பதுதான்.

சிப்ஸ்

# விறகு என்பது ஆங்கிலத்தில்?

Firewood

# l Amnesty என்றால் மன்னிப்புதானே?

பொது மன்னிப்பு -அரசியல் கைதிகளுக்கு.

# In the long run என்பதை ஒரே சொல்லில் கூற முடியுமா?

Ultimately. It pays in the long run to buy standard goods.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x