

நம்முடைய வரலாற்றைத் தெரிந்துகொள்வது முக்கியமாகப் பெண்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்வது அவசியம். ஆதிகாலத்தில் பெண்தான் ஒரு குழுவை வழிநடத்திச் சென்றிருக்கிறார். பெண்வழிச் சமூகமாக இருந்து படிப்படியாக மாறி இன்று ஆண் ஆளும் சமூகமாக மாறியிருக்கிறது. எப்படி இந்த மாற்றம்? எதனால் இந்த மாற்றம்? ஏன் பெண்களின் வரலாறு தொடர்ந்து மறைக்கப்பட்டு வருகிறது? இதுபோன்ற கேள்விகள் எல்லாம் ஒவ்வொரு பெண்ணுக்கும் எழ வேண்டும். அப்பொழுதுதான் மாற்றம் நிகழும். 15 வயதுப் பெண்ணான எனக்கு இந்தக் கேள்விகள் எழக் காரணம் எழுத்தாளர் நாறும்பூநாதன்.
வேலை இல்லாதவனின் நீண்ட பொழுது போல கரோனா காலத்துப் பகல் பொழுது ஒன்றில் மதியம் 2 மணிக்கு கழுகு மலை பற்றி ஒருவர் முகநூலில் பேசிகொண்டிருந்தார். அவரின் மொழி நடையும் சிரித்த முகமும் என்னை ஈர்த்தன. அவரை முகநூலில் பின்பற்ற ஆரம்பித்தோம். அன்று மாலை, ‘மறுநாள் முதல் சிறுகதை சொல்லப்போகிறேன்’ என அவர் அறிவித்தார். அடுத்த நாள், என் வாழ்வில் மிகப் பெரிய மாற்றம் தரும் எனத் தெரியாமல் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘உபரி’ சிறுகதையைக் கேட்டேன். அதுதான் நாறும்பூநாதனுடனான முதல் சந்திப்பு. அவர் கதைகள் சொல்லச் சொல்ல கலந்துரையாடினோம்.