

தொழில்நுட்ப வளர்ச்சியால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகள் கிடைத்திருக்கிறபோதும் அவர்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளன. கண்காணிப்பு கேமராக்கள், பெண்களின் பாதுகாப்புக்கான ‘காவலன்’, ‘காவல் உதவி’ உள்ளிட்ட பிரத்யேகச் செயலிகள், 24 மணிநேர அவசர உதவி எண்கள் போன்றவை பெண்களின் பாதுகாப்புக்கு உதவுகின்றன. ஆனால், இணையக் குற்றங்கள் குறித்துப் போதுமான விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலான பெண்கள், குறிப்பாகக் கிராமப்புறப் பெண்கள் எளிதில் ஆபத்தில் சிக்கிவிடுகின்றனர்.
தனக்கு ஏற்பட்ட பிரச்சினையை வெளிப்படையாகச் சொல்வதற்கு ஒரு பெண் தயங்குகிறபோது, குற்றவாளிக்கு அது சாதகமாகிவிடுகிறது. பெண்தானே, இவள் என்ன செய்துவிடுவாள் என்கிற மெத்தனப்போக்கும் சைபர் குற்றங்களைக் கையாள்வதில் உள்ள அலட்சியமும் நடைமுறைச் சிக்கல்களும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகக் காரணமாகின்றன.