

மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியா மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியதற்குக் காரணமாகியிருக்கிறார், ஜெமிமா ரோட்ரிக்ஸ். உலகக் கோப்பையின் மிக முக்கியமான அரையிறுதிப் போட்டியில் 339 என்கிற இலக்கைத் துரத்திப் பிடிப்பது என்பது நினைத்துகூடப் பார்க்க முடியாதது. ஆனால், 9 பந்துகள் மீதமிருக்கையில் 341 ரன்களைக் குவித்து இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றதில் சிங்கப் பெண்ணாகியிருக்கிறார் ஜெமிமா.
இத்தொடரில் முதல் நான்கு போட்டிகளில் 0, 32, 0, 33 ரன்கள் எனப் பெரிய ஸ்கோர் அடிக்க சிரமப்பட்ட ஜெமிமா, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அணியிலிருந்தே நீக்கப்பட்டார். ஆனால், வென்றே ஆக வேண்டிய நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் மீண்டும் அணிக்குள் வந்த ஜெமிமா, 76 ரன்கள் குவித்து வெற்றியில் முக்கியப் பங்காற்றினார். அடுத்ததாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் தன் மந்திர ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஜெமிமா. இரண்டு விக்கெட்டுகள் விழுந்த பிறகு கேப்டன் ஹர்மன்பிரீத் கௌருடன் இணைந்து அணியைத் தூக்கி நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.