

குடும்பத்தினருடன் கடற்கரைக்குப் போயிருந்தேன். ஆரஞ்சு வண்ணத்தில் தகதகத்தது அதிகாலைக் கடல். அலைகளுக்கு அருகில் கல்லூரி மாணவி ஒருவர் ஊதா நிறப் பாவாடை, கறுப்பு டாப்ஸ் அணிந்து அழகாக ஆடிக்கொண்டிருந்தார். சற்றுத் தொலைவில் அவரது தோழிகள் மூன்று பேர் செல்போனைப் பிடித்துக்கொண்டு, “அலை வர்றப்ப ஆடுடி” என்று சொல்ல, “எனக்குப் பின்னால அலை எப்ப வரும்னு எனக்கு எப்டிடீ தெரியும்?” என்று ‘டான்சர்’ புலம்ப, “நான் கை காமிக்கறப்ப ஆடித் தொலை” என்று ஒரு தோழி கத்த, ஒருவழியாக ஷூட்டிங் முடிந்த... அவ்வளவு சீக்கிரம் எல்லாம் முடியாது. அடுத்த தோழி, அவருக்கு அடுத்தவர் என்று வரிசையாக மூவரும் ஆடி முடித்து வியர்க்க விறுவிறுக்கப் புறப்பட்டனர்.
இணையம் தரும் சுதந்திர வெளிஇந்த நடனக் காட்சியைப் பல இடங்களில் பார்க்கிறேன். மால், பார்க், ரயில்வே ஸ்டேஷன், நெடுஞ்சாலைகளில் உள்ள கூட்டமில்லாத உணவகங்களின் முன்புறம் என்று இளம்பெண்கள் நடனமாடியும், காமெடி வசனங்கள் பேசியும் ‘ரீல்ஸ்’ எடுக்கிறார்கள். இன்ஸ்டகிராமில் பகிர்ந்து மகிழ்கிறார்கள். பொது இடங்களில் நடனமாடுவதிலும், பேசுவதிலும் உள்ள மனத்தடையை இது உடைத்திருப்பது ஆரோக்கியமான விஷயம்.