

புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீவன் கிங், 1987இல் எழுதிய த்ரில்லர் நாவலின் பெயர் ‘மிஸரி’ (Misery). அந்த நாவலின் கதையில் இரண்டு முதன்மைக் கதை மாந்தர்கள். ஒருவர், நட்சத்திர நாவலாசிரியர் பால் ஷெல்டன். மற்றொருவர் அவருடைய தீவிர வாசகி. ஷெல்டன் தொடர்ந்து வரலாற்று காதல் கதைகளை எழுதி வருகிறார்.
அவருடைய புனைவுகள் அனைத்திலும் மிஸரி சாஸ்டெய்ன் என்கிற பெண்ணே கதாநாயகியாக வருகிறார். ‘எத்தனை புத்தகங்கள் இதே பாணியில் எழுதிக் குவித்தாலும் விற்பனையில் குறை வைக்கவில்லை; ஆனால், ஓர் எழுத்தாளராக எனக்கு அங்கீகாரம் கிடைக்க வில்லை’ என்று வருந்துகிறார் ஷெல்டன்.