

‘சாமி! என் குழந்தைக்கு எந்தக் கஷ்டமும் வராம நீதான்பா பாத்துக்கணும்’ - இப்படி நம்மை விரும்புபவர்கள் கடவுளிடம் வேண்டிக்கொண்டு பார்த்திருப்போம். ஆனால், ஒருவேளை சாமி அப்படிப்பட்ட வரத்தைக் கொடுத்துவிட்டால், அதைவிட ஒரு பெரிய கஷ்டம் இருக்குமா வாழ்க்கையில்? எங்கள் வீட்டில் தினமும் மோட்டார் சுவிட்சை ஆன், ஆஃப் செய்வது எங்கள் பாட்டியின் பொறுப்பு. தண்ணீர்த் தொட்டி நிரம்பி, தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டதும் பாட்டியின் ஓட்டம் ஆரம்பித்துவிடும். வேகமாகச் சென்று சுவிட்சை நிறுத்துவார். ஒருநாள் திடீரென்று அந்தப் பொறுப்பை என் தலையில் தூக்கிவைத்துவிட்டார்.
கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தாலும், தண்ணீர் வீணாகிவிடும். கஷ்டமாக இருக்கும், பாட்டியிடமும் திட்டு வாங்க வேண்டியிருக்கும். எதுக்கு வம்பு என்று தண்ணீர்த் தொட்டி நிறைகிறவரை காதைக் கூர்மையாக வைத்திருந்தேன். தண்ணீர் மேலே இருந்து கொட்டத் தொடங்கியதும், பாட்டியைப் போலவே ஓடிப்போய் சுவிட்ச்சை ஆஃப் செய்தேன்.