

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கத்தின் விளைவால் இன்னோர் இடைவெளியும் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதையும் கவனிக்க வேண்டும். அது, ஏஐ இடைவெளி. இணையம் உள்ளிட்ட நவீன வசதிகளை அணுகுவதில் நிலவும் ஏற்றத்தாழ்வைக் குறிக்கும் ‘டிஜிட்டல் டிவைடு’ போன்றதே இந்த ஏஐ இடைவெளியும். ஏஐ சேவைகளை அணுகுவதிலும் அதை உள்வாங்கிக் கொள்வதிலும் உள்ள இடைவெளி என இதைப் புரிந்துகொள்ளலாம்.
கிரஹாம் சொன்னது: ஏஐ இடைவெளி ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களில் ஒன்றாக எழுதாத் தலைமுறை உருவாகக்கூடிய அச்சத்தைக் குறிப்பிடலாம். அதென்ன எழுதாத் தலைமுறை? சுயமாக எழுதத் தடுமாறும் தலைமுறை. ’அடுத்து வரும் சில பத்தாண்டுகளில் எழுதத் தெரிந்தவர்கள் அதிகம் இருக்க மாட்டார்கள்’ என சிலிகான்வேலி ஆளுமைகளில் ஒருவரும் ஸ்டார்ட்அப் வழிகாட்டியுமான பால் கிரஹாம் எழுதிய பதிவு இந்த அச்சத்தைப் படம்பிடித்துக்காட்டுகிறது. பலருக்கும் எழுதுவது அடிப்படையிலேயே கடினமானது எனக் கூறும் கிரஹாம், எழுதுவது என்றால் தெளிவாகச் சிந்திப்பது என்கிறார். தெளிவாகச் சிந்திப்பது கடினம் என்றால் எழுதுவதும் கடினம்.