Published : 26 Aug 2018 09:44 am

Updated : 26 Aug 2018 09:44 am

 

Published : 26 Aug 2018 09:44 AM
Last Updated : 26 Aug 2018 09:44 AM

பெண் சக்தி: கைகொடுக்கும் பெண்களின் கரம்

கடவுளின் தேசமான கேரளாவின் துயரக் கண்ணீர் இன்னும் வடிந்தபாடில்லை. 87 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கொட்டித் தீர்த்த மழையால் 34 அணைகள் திறக்கப்பட்டு மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நிலச்சரிவும் கரை மீறி ஓடும் வெள்ளமும் அதில் அடித்துச் செல்லப்படும் வீடுகளும் உடைமைகளும் இயற்கைச் சீற்றத்தின் வீரியத்தை நமக்கு உணர்த்துகின்றன.

இந்த இயற்கைச் சீற்றம் வெறுப்பு அரசியலைப் பின்னுக்குத் தள்ளி மனிதநேயத்தை முன்னுக்கு நகர்த்தியுள்ளது. வீடு, வாசல், உடைமை, உறவினர்கள், வாழ்வாதாரம் என அனைத்தையும் இழந்து நிற்கும் இரண்டு லட்சத்துக்கும் மேலான மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மனிதநேயம் கொண்ட ஏராளமானோர் உலகம் முழுவதிலுமிருந்து கேரளாவுக்கு உதவி செய்யக் களமிறங்கியுள்ளனர்.


கேரளாவை மீட்டெடுக்கப் பொருளாதாரரீதியாக உதவுவதோடு மட்டுமல்லாமல்; களத்திலும் பெண்கள் பெருமளவில் பங்குபெற்றுள்ளனர். இதில் அவர்களின் பங்களிப்பு மகத்தானது.

பறை ஒலியால் குவிந்த உதவி

‘மதியம் 2.30 மணிக்குப் புதுச்சேரி காந்தி வீதி சின்ன மணிக்கூண்டு சந்திப்பில் ஓவியர் தனசு எழுதிய அட்டைகளைத் தோழர் விசாகனும் நானும் பிடித்தபடி நாடக இயக்குநர் கோபி பறையடிக்க நடிகர் பிரபேந்திரன் கொம்பு ஊதக் கேரள மக்களுக்கு நிவாரண உதவி கேட்டு நடந்தோம். புகைப்படக் கலைஞர் அருண் குமாரின் பையில் ஒரு காலணியை முதலில் போட்டு ஒரு வியாபாரி தன் அன்பைச் சேர்ப்பித்தார்.

பெத்திச் செமினார் பள்ளி வரும் முன்பே இரண்டு சிறிய சாக்குகள் நிரம்பி வழிந்தன. ஆனந்தன் தோழரும் வந்து சேர்ந்து கொள்ள எடுத்துச் சென்ற மூன்று சாக்குகளும் நிறைந்தன. நிறைய வியாபாரிகள் பணமாகக் கொடுக்க முன்வந்தனர் யாரிடமும் பணம் வாங்கவில்லை. மிகச் சிறிய கடைக்காரர்கள் குழந்தைகளுக்கு ஜட்டி கொடுத்து உதவினர். ஷார்ட்ஸ், நைட்டி, டி சர்ட், சட்டை, லெக்கின்ஸ், குழந்தைகள் உடையென வந்து குவிந்தன.

கடைவீதிக்கு வந்திருந்த பலர் கொடுக்க முன்வந்த பணத்தைத் துணியாகக் காலணியாக வாங்கித் தரக் கேட்டோம். டீ சர்ட், காலணிகள் வாங்கித் தந்து நெகிழ வைத்தார்கள். பறையொலி கேட்டுக் கடைவீதிக்கு வந்திருந்த வீடூர் ஷேடோ கிராமியக் கலைக்குழு இயக்குநர் சத்தியமூத்தியும் அங்காளன் தோழர் உள்ளிட்டவர்களும் எங்களுடன் இணைந்தனர்.

சத்தியா தோழர் பறையை வாங்கி வாசிக்க நேரு வீதி கொஞ்சம் அதிர்ந்து திரும்பிப் பார்த்து. மூன்று மணி நேரத்தில் நான்கு சாக்குகள் நிறைந்தன’ என முகநூலில் பதிவிட்டுள்ளார் கவிஞர் மாலதி மைத்ரி.

மிஞ்சாததையும் தானமாக்கியவர்கள்

கல்லூரிப் படிப்புக்காகச் சமூக வலைத் தளங்களின் மூலம் திரட்டப்பட்ட ஒன்றரை லட்சம் ரூபாயைக் கேரள முதல்வர் நிவாரண நிதிக்குக் கொடுத்து உதவியுள்ளார், தன் வறுமையை மீறி மீன் விற்றபடியே கல்லூரியில் படிக்கும் ஹனன். “நான் மீன் விற்று படித்துவருகிறேன் என்ற செய்தி அறிந்த முகம் தெரியாத பலர் ஐம்பது, நூறு, ஆயிரம் என என் வங்கிக் கணக்கில் பணம் போட்டு உதவினார்கள்.

அப்படிக் கிடைத்ததுதான் இந்த ஒன்றரை லட்சம் ரூபாய். தற்போது அந்தப் பணத்தை மக்களுக்குத் திருப்பிக் கொடுப்பது என்னுடைய கடமை” என ஹனன் சொல்கிறார். அவரும் இன்று ஒரு வெள்ளப் பாதிப்பு முகாமில்தான் உள்ளார். அதேபோல் கரூர் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி அக்‌ஷயா தன்னுடைய மருத்துவச் செலவுக்காக முகநூல் வாயிலாகத் திரட்டப்பட்ட ரூபாயில் மருத்துவ செலவுப் போக மீதமிருந்த ஐந்தாயிரத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்குக் கொடுத்துள்ளார்.

“கேரளாவில் வெள்ளம் வந்தப்போ ரெண்டு நாளா டிவியில் அதைப்பத்திதான் நிறையச் செய்தி வந்துச்சு. அத பார்க்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதுனாலதான் எங்கிட்ட இருந்த மீதிக் காசைக் கேரள மக்களுக்குக் கொடுத்தேன்” என்கிறார் அக்‌ஷயா.

இந்தச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டாலும் அதையெல்லாம் மறந்து, கேரளாவுக்கு உதவ மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள், தங்களிடம் இருந்த 21 ஆயிரம் ரூபாயைக் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள் ரூபாய் ஒரு லட்சத்தைக் கேரள வெள்ள நிவாரண நிதிக்குக் கொடுத்து உதவப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளுக்கு உதவும் மாணவி

#pu_kerala_relief என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி ஏராளமான அத்தியாவசியப் பொருட்களைச் சேகரிப்பதுடன் குழந்தைகளுக்கான பொம்மைகளையும் புதுவை மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் சேகரித்து வருகிறார்கள். “பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பொதுமக்கள் எனப் பலரிடம் பணத்தையும் அத்தியாவசியப் பொருட்களையும் திரட்டி வருகிறோம். இந்தப் பணியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு வாரமாக ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களைச் சேகரித்துள்ளோம்.

அதேபோல் ரொக்கமாக ஆறு லட்சம் ரூபாயைக் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்கவுள்ளோம். முகாம்களில் சோகத்துடனும் பயத்துடனும் இருக்கும் குழந்தைகளின் மனநிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகப் பொம்மைகளைச் சேகரித்தோம். குழந்தைகளுக்குப் பொம்மை வேண்டும் எனக் கேட்டபோது பொதுமக்கள் மகிழ்ச்சியாக ஏராளமான பொம்மைகளை வாங்கித் தந்து உதவினார்கள்” என்று சொல்கிறார் அந்தச் சேவையை ஒருங்கிணைக்கும் பல்கலைக்கழக மாணவி ஷாம்லி நாராயணன்.

அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்றிணைந்து கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியுள்ளனர். மும்பை பகுதியில் செயல்பட்டு வரும் ஷஹாஸ், ஆம்பிள் என்ற தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் கேரள வெள்ள நிவாரணத்துக்கு உதவும் வகையில் வீடு வீடாகச் சென்று சமையலுக்குத் தேவையான பொருட்கள், சானிட்டரி நாப்கின், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றைச் சேகரித்துள்ளனர்.

களத்தில் உதவும் பெண்கள்

வெள்ளம் சூழ்ந்த வீட்டில் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்த பெண்ணை ஹெலிகாப்டர் உதவியால் மீட்டுள்ளார் கொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிந்து சத்தியஜித். “நாங்கள் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவருக்குக் குழந்தை பிறந்துவிட்டது. கொஞ்சம் தாமதமாக நாங்கள் சென்றிருந்தாலும் அவரின் நிலை மோசமாகி இருக்கும்.

வயநாடு போன்ற பகுதிகளில் ஆற்று வெள்ளம் ஊருக்கு வருவதற்குச் சில மணி நேரத்துக்கு முன்பு அப்பகுதிகளில் இருந்த மக்களை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டோம்” என்கிறார் அவர். இயற்கைப் பேரிடரின்போது பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொருட்கள், நிதியுதவி அளிப்பதுடன் நின்றுவிடாமல் களத்தில் இறங்கிப் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துகொண்டிருக்கின்றனர் பிந்துவும் அவரது Do for others குழுவினரும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் கப்பற்படை, ராணுவத்துடன் இணைந்து இவர்கள் சேவை செய்து வருகிறார்கள்.

“கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கவும் வெள்ளநீர் வடிந்த பகுதிகளை மறு சீரமைப்புச் செய்யவும் அதிகமான அளவு மனித ஆற்றல் தேவைப்படுகிறது. வயநாடு, குட்டநாடு போன்ற பகுதிகளில் வாழும் பழங்குடிகள், வெள்ளத்தால் அனைத்தையும் இழந்து நிர்கதியாக உள்ளனர். பல பழங்குடிகளின் வீடுகள் முழுமையாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

மெத்தை, தலையணை, அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய் ஸ்டவ் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் தேவை அதிகமாக உள்ளது. எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நூறு குடும்பங்களைத் தத்தெடுத்து அவர்களுக்குத் தேவையான உதவியைச் செய்து வருகிறார்கள். அதேபோல் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு பலர் உதவ முன்வர வேண்டும்” என்கிறார் பிந்து.

அன்பு வெள்ளத்தால் மீண்டெழும் கேரளா

திருச்சூர் மாவட்ட ஆட்சியரான அனுபமா பல்வேறு பகுதிகளிருந்து அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்காகத் தனியார் மதுபான சேமிப்பு கிடங்குகளின் பூட்டுகளை அதிரடியாக உடைத்துள்ளார். அதேபோல் திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியரான கே.வாசுகி, முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்ட அடுத்த சில மணி நேரத்திலேயே 54 லாரிகள் மூலமாக அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு வந்து அவர்களுக்கு வழங்கியுள்ளார்.

வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுடன் இணைந்து அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் உத்வேகத்துடனும் முழு முனைப்புடனும் பணியாற்றி வருகிறார்கள். மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடிய கேரளாவில் இன்று மக்களின் அன்பு என்ற வெள்ளம் பாயத் தொடங்கியுள்ளது. மனிதாபிமானம் புரண்டோடும் இந்த அன்பு வெள்ளம் கேரளாவின் வலியையும் ஆற்றும். இழப்பையும் ஈடு செய்யும். அந்த மக்களை விரைவில் மீண்டெழ வைக்கும்.


கேரள் வெள்ளம்வெள்ள நிவாரணம்பெண்கள் உதவிபெண்கள் நிவாரணம்பெண் சக்திகவிஞர் மாலதி மைத்ரிபாலியல் தொழிலாளர்கள் உதவி ஷாம்லி நாராயணன்பிந்து சத்தியஜித்Do for others

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author