

கலைஞர் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட கருணாநிதியின் மரணத்துக்குத் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் துக்கம் அனுசரித்துக்கொண்டிருக்கிறது. அவருடைய இறுதி ஊர்வலத்துக்குக் கூடிய கூட்டமும் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் அவருக்குச் செலுத்தப்படும் அஞ்சலியும் இளைய தலைமுறையினர் சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.
“கலைஞரை ஏன் இந்த அளவுக்குக் கொண்டாடுகிறார்கள்?இவ்வளவு பெரிய கூட்டம் ஒன்று அவரை வழியனுப்பி வைக்கக் காரணம் என்ன?” என்றுகூடக் கேட்கலாம். அதற்கு ஒரே பதில் ‘அவர் போராடியவர்’என்பதுதான்.
“படிக்கிற வயசில போராடுறது, அரசியல் நாட்டம் எல்லாம் தப்பு” என்று மிக இளம் வயதிலேயே பிள்ளைகளை அரசியல் நீக்கம் செய்துகொண்டிருப்பவர்கள் நாம். எனினும், இன்று நம்மில் பெரும்பாலானோரின் குழந்தைகள் படித்துக்கொண்டிருப்பதற்குக் காரணம் காமராஜர், கருணாநிதி போன்ற பலரும் போராடியதுதான்
என்ற உண்மையை நாம் உணர்வதில்லை. எதைப் பற்றியும் கவலைகொள்ளாமல் தங்கள் நலனை மட்டும் கருத்தில் வைத்துக்கொண்டு வாழ்பவர்களுக்கும் சேர்த்துத்தான் கருணாநிதி போன்றவர்கள் போராடி இருக்கிறார்கள். இந்தப் போராட்டங்களின் விதைகள் ‘படிக்கிற வயசுல’தான் விழுந்தன என்பது இன்றைய மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்.
சண்டையிட்டுப் பள்ளியில் சேர்ந்தவர்!
சமூகத்தால் பிற்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த இசைக் குடும்ப மரபைச் சேர்ந்தவர் கருணாநிதி. குடும்ப வழக்கத்துக்கு ஏற்ப அவரைச் சிறுவயதிலேயே இசை கற்க அனுப்பினார்கள். ஆனால், இசைப் பயிற்சியில் அவருக்கு நாட்டம் இல்லை. ஏன் தெரியுமா? அவரே தனது ‘நெஞ்சுக்கு நீதி’சுயசரிதை நூலில் இப்படி எழுதி இருக்கிறார்:
“நாலு பெரிய மனிதர்கள் இருக்கும் இடத்தில் சட்டை போட்டுக்கொள்ள முடியாது. மேல் துண்டையும் எடுத்து இடுப்பிலே கட்டிக்கொள்ள வேண்டும். செருப்பு அணிந்துகொள்வதும் தவறு. இப்படியெல்லாம் கடுமையான அடிமைத்தனம்; தெய்வீகத்தின் பெயராலும் சாதி, மத சாத்திர சம்பிரதாயங்களின் பெயராலும் ஒரு சமுதாயத்தைக் கொடுமைக்கு ஆளாக்குவதை என் பிஞ்சு மனம் வன்மையாக எதிர்க்கக் கிளம்பியது. அதன் காரணமாகவே இசைப் பயிற்சியை வெறுத்தேன்.”
அது மட்டுமல்ல, ஐந்தாம் வகுப்பு சேரச் சென்றபோது அவருக்குப் பள்ளியில் இடம் மறுக்கப்பட்டது. தனக்கு இடம் கிடைக்கவில்லை என்றால் குளத்தில் குதித்துவிடுவேன் என்று மிரட்டிப் பள்ளியில் சேர்ந்தார். அந்த ஆண்டு அவர் வகுப்பில் அவரே முதல் மாணவர்.
சாதியரீதியில், சமூகரீதியில் தனக்கும் தன்னுடைய ஊரைச் சார்ந்தவர்களுக்கும் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்த அரசியல் தெளிவு கருணாநிதிக்கு ஏற்பட்டதும் அதே ஐந்தாம் வகுப்பில்தான். பிற்படுத்தப்பட்ட மக்களுடைய நலனுக்காகப் பாடுபட்டவரும் நீதிக் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான பனகல் அரசரைப் பற்றிய நூல் ஒன்று கருணாநிதிக்குத் துணைப் பாடமாக இருந்தது. அதைப் படித்த பிறகுதான் அவருக்கு அரசியல் தெளிவு ஏற்பட ஆரம்பிக்கிறது.
‘தான் செய்ததும் சரிதான்;
ஆசிரியர் செய்ததும் சரிதான்’
1938-ல் அப்போதைய மதராஸ் மாகாணத்தின் முதல்வராக இருந்த ராஜாஜி இந்தியை ஆட்சி மொழியாக்கத் திட்டமிட்டார். அதை எதிர்த்துத் தமிழகமே கொந்தளித்தது. பட்டுக்கோட்டை அழகிரி, பெரியார் ஆகியோரின் பேச்சுக்களைக் கேட்டுப் புரட்சிகரமான சிந்தனைகளை கருணாநிதி வளர்த்துக்கொள்ள ஆரம்பித்திருந்த காலம் அது. அவருடைய பங்குக்கு சக மாணவர்களையும் திரட்டிக்கொண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தைத் தன்னுடைய ஊரில் நடத்தினார்.
தன் பள்ளியின் இந்தி ஆசிரியரிடமே இந்தித் திணிப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய துண்டுக் காகிதத்தை நீட்டினார். அந்த ஆசிரியர் பேசாமல் வாங்கிக்கொண்டு சென்றிருக்கிறார். மறுநாள் கரும்பலகையில் இந்தியில் ஒரு வாசகத்தை எழுதிப் போட்டு கருணாநிதியைப் படிக்கும்படி ஆசிரியர் கூறியிருக்கிறார்.அவருக்குப் படிக்கத் தெரியாததால் ஆசிரியர் அறை விட்டிருக்கிறார். ‘தான் செய்ததும் சரிதான்; ஆசிரியர் செய்ததும் சரிதான்’ என்று தன் சுயசரிதையில் கருணாநிதி எழுதுகிறார்.
மாணவ நேசன்
அதே 1938-ல்தான் ‘நட்பு’ என்ற தலைப்பில் முதல் சொற்பொழிவை கருணாநிதி ஆற்றினார். சிறுவர் சீர்திருத்த சங்கம், தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் போன்ற அமைப்புகளையும் 8-ம் வகுப்பு மாணவராக இருந்த கருணாநிதி தொடங்கினார். அது மட்டுமா, ‘மாணவ நேசன்’ என்ற மாத இதழைக் கையெழுத்துப் பிரதியாக அதே ஆண்டில் தொடங்கி, பத்திரிகைப் பயணத்திலும் அடியெடுத்து வைத்தார்.
இளம் பருவத்தில் ஒருவருக்கு இப்படிக் கிடைக்கும் சமூக விழிப்புணர்வும் போராட்டக் குணமும்தான் அவருடைய எதிர்காலத்தை மட்டுமல்லாமல் அவருடைய சமூகத்தினரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கின்றன. மேலும், தனக்கு ஏற்பட்ட அவமானங்களை தன்னுடையதாக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பொருத்திப் பார்க்கும்போதுதான் ஒரு தலைவர் உருவாகிறார். அது கருணாநிதிக்கும் பொருந்தும். போராடினால்தான் வாழ்க்கை! போராட்டங்கள்தாம் கருணாநிதிகளை உருவாக்குகின்றன.