Published : 18 Aug 2018 06:05 PM
Last Updated : 18 Aug 2018 06:05 PM

பார்வை: புறக்கணிக்கப்படும் கண்ணீர்

(ஒக்கிப் பேரிடர் குறித்து ஆவணப்படம் எடுத்துவருகிறார் பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின். மனிதி அமைப்பைச் சேர்ந்த செல்வி என்பவர் அந்த ஆவணப்படத்தில் தன் கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். அதன் சுருக்கமான தொகுப்பு இது)

ஒக்கிப் பேரிடர் மரணங்களின் எண்ணிக்கையை ஊடகங்கள் வெறும் இலக்கங்களாக மாற்றிவிட்டன. ஆனால், ஒவ்வொரு மரணமும் ஒரு குடும்பத்தின், ஒரு பெண்ணின் பெருந்துயரம். இந்தப் பேரிடரால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் கடற்கரைப் பெண்களும் குழந்தைகளும்தாம். இவர்களைக் குறித்து அக்கறைப்பட சமவெளி மக்களுக்கு நேரமில்லை என்றே வைத்துக்கொள்வோம். இந்தக் கள நிலைமைகளைப் படித்தறிந்து அறிக்கையிடுவதற்காக 25 பேர் கொண்ட ஒரு குழு வந்தது.

ஓரிரு வரிகளில் பெண்களின் நிலையைச் சொன்னதோடு இந்த அறிக்கை முடிந்துவிடுகிறது. இது மேலும் துயரத்தைத் தருகிறது. பொருளாதாரப் பாதிப்பும் ஆண்களின் மரணமும் முடிவாகத் தாக்கம் செலுத்துவது பெண்களின் மேல்தானே? அந்தக் ‘கரிசனம்’ உண்மை கண்டறியும் குழுவுக்குக்கூட இல்லாமல் போகும்போது, பெண்ணின் நிவாரணத்துக்கு என்ன வழி?

இழப்பீடு நிவாரணம் அல்ல

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக அரசு ரூ.20 லட்சம் கொடுத்தது. ஒரு கோடி ரூபாய் வரை கடன் வாங்கி முதலீடு செய்த படகு மூழ்கிவிட்டது. கிடைத்த நிவாரணம் கடனின் ஒரு பகுதியைக் கழிக்க உதவும். உளநல உதவி வழங்க நாங்கள் சந்தித்த வீடு ஒவ்வொன்றிலும் சொத்து எவ்வளவு இருக்கிறது என்பதைவிட, கடன் எவ்வளவு என்றுதான் கேட்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் ரூ.30 லட்சம், ரூ.40 லட்சம் கடன்.

தற்கொலை எண்ணம் பல பெண்களிடம் இருந்ததற்குக் கடன் தொல்லையும் முக்கியமான காரணம். வரதட்சிணை அந்தச் சமூகத்தில் மிகப்பெரிய பொருளாதாரச் சுமை. பத்து வயது சிறுவனை முன்னிட்டு ரூ.30 லட்சம் கடன் கொடுக்க முன் வருவார்கள். பையன் 15, 18 வயதில் மீன்பிடிக்கப் போய், கடனைத் தீர்த்துவிடுவான் என்று நம்புகிறார்கள். பெண்ணை நம்பி யார் கடன் கொடுப்பார்கள்?

இந்தக் கடன் கந்துவட்டிக் கடன். இந்த முதலீடு கிராமங்களிலுள்ள சிறு சேமிப்புகளின் திரட்சி! சிறுகச் சிறுகச் சீட்டு மூலமாகப் பெண்கள் சேர்த்த பணமும் அதில் அடங்கும். கடற்கரையின் கடன் முதலீட்டுப் பொருளாதாரம் சிக்கலானது. கந்து வட்டிக்குக் கொடுத்த பணத்தைக் கேட்டு ஒக்கி பாதித்த குடும்பங்களைத் தொல்லைபடுத்தக் கூடாது என்று சட்டம் போட்டவுடன் சிக்கல் தீர்ந்துவிடாது.

ரூ. 20 லட்சம் கொடுத்ததோடு வழக்குகளை அரசு மூடிவிட்டது. கடலில் காணாமல் போன மீனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க விரும்பாத அரசு இது. ‘ஒக்கிப் பேரிடரில் இனஒதுக்கல்கள்’ என்ற உண்மை கண்டறியும் அறிக்கையின் தலைப்பு மிகவும் பொருத்தமானதுதான்.

குழந்தைகளின் துயரம்

காணாமல் போன மீனவர்களின் உடலைப் பார்க்காத பிஞ்சுக் குழந்தைகள் ‘அப்பா எங்கம்மா?’ என்று கேட்டு நச்சரித்துக் கொண்டிருக்கின்றன. ‘அப்பா வெளிநாட்ல வேலைக்குப் போயிருக்கார், வந்துடுவார்’ என்று அம்மாக்கள் சமாதானப்படுத்துகிறார்கள். ‘வீட்டில் நிலைமை வித்தியாசமாக இருக்கிறதே, இதை நம்புவதா, கூடாதா?’. பள்ளிக்குப் போனால் அங்கே சக மாணவர்களும் ஆசிரியர்களும் பரிதாபமாகப் பார்க்கிறார்கள்.

ஏதோ விபரீதம் இருப்பதாய்க் குழந்தைக்குப் புரிகிறது. இதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது? குழந்தையின் மனத்தில் குழப்பமும் அச்சமும் மேலிடுகின்றன. வீட்டில் பழைய நிலைமை இல்லை. அப்பா அன்றே இறந்துவிட்டார் என்று பின்னாளில் ஒரு பொழுதில் குழந்தை தெரிந்துகொள்ளும்போது அதிர்ச்சியும் நாட்பட்ட குழப்பத்தின் காயமும் அந்தப் பிஞ்சு மனத்தைப் பாதிக்கும்.

இறப்பை மனம் ஏற்றுக்கொள்வது தேவை. இறந்தவர் உடலின் மீது விழுந்து புரண்டு அழுதால் ஒருவாறு துக்கத்தை ஆற்றிக் கொள்ளலாம், யதார்த்தத்தை மனம் படிப்படியாக ஏற்றுக்கொள்ளும். ஆண்டுதோறும் அவர் சமாதியில் வழிபாடு நடத்தி அந்தத் துக்கத்தைப் படிப்படியாய்க் கரைத்துக்கொள்ளலாம். 

‘காணாமல் போனவ’ரின் மனைவிக்கு இது சாத்தியமல்ல. மறுமணம் குறித்த யோசனைகளை இந்தப் பெண் வலுவாக நிராகரித்துவிடுகிறார். “நாலு வருசத்துக்குப் பிறகு அவரு திரும்பி வந்தா நான் என்ன செய்வேன், சொல்லுங்க?” என்று எதிர்க் கேள்வி வீசுகிறார். கடல் வாழ்க்கையில் இது முக்கியமான சிக்கல். ஏழாண்டுகளுக்குப் பிறகு திரும்பி வந்தவர்களின் கதை ஒன்றும் கடற்கரைக்குப் புதிதல்ல.

தடுக்கும் கவுரவம்

மனைவியை வேலைக்கு அனுப்பாமல் இருப்பதுதான் குடும்ப கவுரவம் என்பதான எண்ணம் பிற சமவெளி சமூகங்களைப் போலவே, கடற்கரைகளில் நீடிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களில் பல மனைவியர் பட்டப் படிப்பு, பிளஸ் டூ முடித்தவர்கள். பெண் வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டும் என்ற மன உந்துதலைச் சமூகம் அவர்களுக்குத் தந்ததில்லை. எந்த நிறுவனமும் – மதமோ அரசோ சமூகமோ அந்த எண்ணத்தைத் தூண்டவில்லை. பெண்ணின் சமூக உற்பத்தித் திறனும் சமூகத்துக்குப் பயன்பட வேண்டும் என்று எந்தத் தரப்பிலும் சிந்திக்கவில்லை.

மறுவாழ்வுத் திட்டங்கள்

கடல் அபலைகள் மறுவாழ்வை முன்னிட்டு ஒரு நிதியம் உருவாக்கப்பட வேண்டும். வாழ்வாதார உருவாக்கம், திறன் பயிற்சி, வழிகாட்டல், ஆய்வு, நிதியுதவி, கடனுதவி ஏற்பாடு சார்ந்த நடவடிக்கைகளுக்கு இந்த நிதியம் ஆதாரமாக அமையலாம்.

கணவனை இழந்தோருக்கான மறுவாழ்வு என்றாலே தையல், உணவுப் பண்டம் தயாரிப்பு போன்ற பரிந்துரைகளே முன்வைக்கப்படுகின்றன. இது பொருத்தமற்ற ஏற்பாடு. உணவுப் பண்டங்களைச் சந்தைப்படுத்தவது சிக்கல் மிகுந்தது. நிறுவனம் சார்ந்த வேலைவாய்ப்புகளை ஆராய வேண்டும். தமிழகக் கடற்கரை நெடுக சுனாமி, ஒக்கி, கடல் விபத்து மரணங்கள் உருவாக்கிய கடல் அபலைகளை வயதுவாரியாக வகைப்படுத்தினால் அவர்களது கல்வி, தொழில் திறன் பயிற்சியின் அடிப்படையில் வாய்ப்புகளை யோசிக்க முடியும்.

ஒக்கி அபலைகளுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அவர்களின் கல்வித் தகுதியும் திறன் பயிற்சியின்மையும் தடையாக நிற்கின்றன. எனினும், அவர்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையினருக்கு நீதிமன்றம், அரசுத் துறைகளில் கடைநிலை ஊழியர் வேலைவாய்ப்புகளை அரசு வழங்கலாம்.

தனியார் நிறுவனங்களிலும் இவர்களின் படிப்புக்கும் திறனுக்கும் ஏற்ற வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. இதில் கடல் அபலைகளுக்கு முன்னுரிமை வழங்க அரசு அறிவுறுத்த முடியும்.

சமூக அக்கறை தேவை

பொதுச் சமூகத்தில், கணவனை இழந்த பெண்களைக் குறித்த அக்கறை விசாலப்பட வேண்டும். கணவனை இழந்த பெண்கள் தொழில் தொடங்க, சமூகத்தில் அவர்களை நம்பி யாரும் கடன் கொடுப்பதில்லை. இவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்வதற்காக வங்கிகள் ஒரு குறிப்பிட்ட சதவீதக் கடன்களை அவர்களுக்கு ஒதுக்குமாறு ரிசர்வ் வங்கி அறிவிக்கை வெளியிட முடியும். சமூக ஆர்வலர்கள் இவற்றைக் கோரிக்கையாக எடுத்துச் செல்ல வேண்டும்.

தொகுப்பு: வறீதையா கான்ஸ்தந்தின்

-முத்துச் செல்வி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x