மின் ‘சாதனை’ப் பெண்! | வானமே எல்லை
ஒன்றைப் படித்துவிட்டு அதற்குத் தொடர்பே இல்லாத துறையில் பணியாற்றுகிறவர்களில் விண்ணரசியும் ஒருவர். கர்னாடக இசை, பரதம் எனச் செவ்வியல் கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர், மின்சாதனங்களைப் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுப் பலரையும் வியக்கவைக்கிறார். கோவை சௌரிபாளையம் பகுதியில் மின்சாதனப் பொருள்களைப் பழுதுநீக்கும் கடை வைத்து நடத்திவரும் விண்ணரசியின் பேச்சு, அவரது கடை முழுவதையும் ஒளிர வைக்கிறது.
விண்ணரசி பிறந்தது, மணம் முடித்தது இரண்டுமே கோயம்புத்தூர்தான். விண்ணரசியும் பெரும்பாலான பெண்களைப் போல அப்பாவின் செல்ல இளவரசி. தந்தை அமிர்தராஜ் சில காலம் ராணுவத்தின் இசைப்பிரிவில் பணியாற்றியிருக்கிறார். சிறுமி விண்ணரசிக்கு வீட்டில் இருக்கும் இசைக் கருவிகளைப் பார்த்து அதன் மீது ஆர்வம் ஏற்பட்டது. வளர்ந்ததும் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் கர்னாடக இசையும் பரதமும் கற்றார். படித்துக்கொண்டிருந்தபோதே திருமணம் முடிந்துவிட, படிப்பும் பாதியில் நின்றது.
