

எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய வாசிப்புப் பழக்கம் என் அம்மாவிடமிருந்து வந்தது. நான் மட்டுமல்ல, என் தம்பி, தங்கை என அனைவருமே அம்மாவைப் பார்த்து வாசிக்கப் பழகினோம். நான் சிறுமியாக இருந்தபோது அறிமுகமானவர் ராஜேஷ்குமார். அப்போதெல்லாம் புத்தகம் வாங்கக் காசு கிடையாது என்பதால் யார் வீட்டில் கிரைம் நாவலைப் பார்த்தாலும், படித்துவிட்டுத் தருகிறேன் என்று வாங்கிவந்துவிடுவேன். இரவல் வாங்கியாவது படித்தால்தான் எனக்கு நிம்மதி!
மனதில் எவ்வளவு துயரம் இருந்தாலும் வாசிக்க வாசிக்க அது கரைந்துவிடும். ‘சமுத்திரகனி அக்காதான் கடையில் பொட்டலம் மடிச்சு தர்ற பேப்பரெல்லாம் படிக்கிறாங்கன்னு பார்த்தா, அவங்க பிள்ளைகளும் அப்படித்தான் படிக்கிறாங்க’ என்று எங்கள் தெருவில் உள்ளவர்கள் எங்களைப் பற்றிச் சொல்வார்கள்.