

பெண், பெண் மொழி, பெண் அரசியல், பெண்ணியம் இவை அனைத்தும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பெண்ணுடலோடு தொடர்புடையவையாகவே இருக்கின்றன. பெண்ணுடல், உற்பத்தியின் பெரும்சக்தியாக இருப்பதால் அது அதிகார மையத்துக்கு ஆதிகாலம் முதல் அச்சுறுத்தல் தருகிறது. வால்காவிலிருந்து கங்கை, காவிரி வரை பல்வேறு மாற்றங்களை உள்வாங்கிக்கொண்ட பெண்ணுடல் இன்றைய இணைய வர்த்தக உலகத்தில் எதை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது, இதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதைக் கவனிக்க வேண்டிய காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம்.
பெண்ணியம், பெண்ணுரிமை குறித்த புரிதல் இன்றையஇளைய தலைமுறைக்குச் சரியான வகையில் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறதா? பெண்ணுரிமை, பெண்ணியம் என்று பேசிக்கொண்டு, தங்களுக்குக் கிடைத்திருக்கும் அனைத்துச் சுதந்திரங்களையும் அனுபவிக்கும் இன்றைய பெண்கள் ஒரு விஷயத்தில் மட்டும் முழுக்கவும் ஆண்மையச் சிந்தனைக் கொண்டவர்களாவே இருக்கிறார்கள்.