

ஆடவருக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் 1975இல்தான் அறிமுக மானது. ஆனால், 1973இலேயே மகளிருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கிவிட்டது. என்றாலும், 1978 தொடரில் இருந்துதான் இந்திய மகளிர் அணி அதில் பங்கேற்று வருகிறது. இந்திய ஆடவர் அணி இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுவிட்டாலும், அந்த வாய்ப்பு மகளிர் அணிக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. தற்போது நடைபெற்றுவரும் மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரிலாவது அந்த வாய்ப்பு சாத்தியமாகுமா என்கிற எதிர்பார்ப்பு விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மகளிருக்கான பதிமூன்றாவது 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் இந்தியா, இலங்கையில் தற்போது நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதி என்கிற ‘நாக் - அவுட்’ சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்டன. இதில், குறிப்பிட வேண்டிய அம்சம், இந்த அரையிறுதி வாய்ப்பைச் சற்றுப் போராடித்தான் இந்திய அணி பெற்றது.
50 ஓவர் மகளிர் உலகக் கோப்பைத் தொடர் களைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும்தான் ஆதிக்கம் செலுத்தும். இதுவரை நடைபெற்றுள்ள 12 தொடர்களில் ஆஸ்திரேலியா 7 முறை, இங்கிலாந்து 4 முறை, நியூசிலாந்து ஒரு முறை எனக் கோப்பை வென்றுள்ளன. இந்திய அணி இதுவரை ஒரு முறைகூடக் கோப்பையை வென்றதில்லை. 2005, 2017ஆம் ஆண்டில் இறுதிப் போட்டி வரை முன்னேறியும் இந்தியா தோல்வியையே சந்தித்தது. இந்த உலகக் கோப்பைத் தொடரை இந்திய அணி வெல்லும் என்கிற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே எழுந்திருக்கிறது. ஹர்மன்பிரீத் கௌர் தலைமையில் இளமையும் அனுபவமும் கலந்த அணியாக நம்பிக்கையும் அளிக்கிறது.