

என் அம்மாவின் மீது நான் மிகுந்த மரியாதையும் மதிப்பும் கொண்டுள்ளேன். எங்கள் தந்தையைச் சிறுவயதில் இழந்து நின்றபோது கல்வியே பெரிது என எங்களைப் படிக்கவைத்து ஆளாக்கியவர். ஆனாலும், உணவு வழங்குவதிலும், பரிமாறுவதிலும் எனக்கும் என் சகோதரர்களுக்கும் இடையே காட்டிய பாகுபாட்டுக்காக நான் அவரிடம் பலமுறை வாக்குவாதம் செய்திருக்கிறேன். சும்மா உட்கார்ந்திருக்கும் என் சகோதரர்களுக்கு இருக்கும் இடத்தில் டீ கொடுக்க வேண்டும், தட்டு வைத்து உணவு பரிமாற வேண்டும், அவர்களது எச்சில் தட்டுகளைத் திரும்ப எடுத்துக்கொண்டு வர வேண்டும்.
எங்கள் பழைய காலப் பெரிய ஓட்டு வீட்டில் அடுக்களை சற்றுத் தாழ்ந்து படிகளில் இறங்கிச் செல்லும் வகையில் இருக்கும். அங்கே சமைத்தவற்றை மேலே இருக்கும் சாப்பாட்டுக்கூட மேசையில் பரிமாறுவார். ஒவ்வொரு முறையும் கீழே இறங்குவதும் மேலே வருவதுமாக இருப்பார். கால் வலி என்றாலும் பொருட்படுத்தாமல் நூறு முறை ஏறி இறங்குவார். இது அம்மாவுக்குக் கற்பிக்கப்பட்ட ஒன்று. ஆசிரியராக இருந்த என் சித்தியும் சித்தப்பாவுக்குப் பணிவிடை செய்ய ஓடுவதை நான் பார்த்திருக் கிறேன்.