

பல ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டில் அநியாயமான விஷயம் ஒன்று நடந்தது. ஒரு மருத்துவப் பரிசோதனையின் மூலம் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறியும் முறை நடைமுறைக்கு வந்தது. ஆனால், சிலர் அதைப் பயன்படுத்தி என்ன செய்தார்கள்? வயிற்றில் இருக்கும் குழந்தை பெண் என்று தெரிந்த பிறகு, அதைக் கருச்சிதைவு செய்துகொண்டார்கள். இதற்கு எதிராக மகளிர் சங்கங்கள் போராட்டங்கள் நடத்தி இந்தக் கொடுமையைத் தடுத்தன. ஒருகாலத்தில் மிக மோசமாக நடைபெற்ற இந்தக் கொடுமை, தற்போது அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குறைந்துவிட்டது.
குழந்தை பிறந்ததுமே பெண் வேறு, ஆண் வேறு என்கிற பாகுபாடு தொடங்கிவிடுகிறது. பெண் சிசுக்கொலை அதிகமாக நடக்கிற இடத்துக்குப் போகும் வாய்ப்பு ஒருமுறை எனக்குக் கிடைத்தது. பிறந்து இரண்டு நாள்களே ஆன தன் குழந்தையைக் கொன்றுவிட்ட ஒரு தாயைச் சந்தித்து அவளை எப்படியோ பேச வைத்தேன். “பத்து மாதம் கருவில் சுமந்து உன் ரத்தத்தைக் கொடுத்துப் பெற்றெடுத்த குழந்தையைக் கொல்வதற்கு எப்படி மனம் வந்தது? அந்தக் குழந்தையை மடியில் கிடத்தி கள்ளிப்பாலையோ நெல்மணியையோ கொடுக்கும்போது வருத்தமாக இல்லையா? அந்தக் குழந்தை படும் சிரமங்களைக் கண்டு நெஞ்சம் பதறவில்லையா?” என்று கேட்டேன்.
அந்தப் பெண் ஒரு வெற்றுப் பார்வை பார்த்தாள். நான் முன்பே சொன்னதுபோல நூற்றாண்டுகளாகச் செய்யப்பட்ட மூளைச்சலவையின் காரணமாகச் சுயமாகச் சிந்தக்கத் தெரியாததன் வெளிப்பாடு அந்தப் பார்வை. “அது வளர்ந்து இருபது வருடங்கள் கழித்துப் படப்போகும் கஷ்டங்களுக்கு இந்த ஒரு நிமிட கஷ்டம் ஒன்றும் பெரிதல்ல” என்று சொன்னாள். அந்தத் துயரத்துக்கு இது பரவாயில்லை என்று அக்கிரமமான செயலை நியாயப்படுத்தும் அளவுக்கு நாம் பெண்களை மூளைச்சலவை செய்துவைத்திருக்கிறோம். ஆனால், இதிலிருந்து எல்லாம் மீண்டு வெளியேறி, ஒரு புத்துணர்வு கிடைத்த மாதிரி பெண் குழந்தைகளைச் சரியான விதத்தில் புரிந்துகொள்கிற ஒரு மனோபாவம் வந்துகொண்டிருக்கிற இந்தக் காலத்தில், பெண் குழந்தைகளை நாம் எப்படி வளர்க்க வேண்டும்?