

வாழ்க்கையில் முதல் முறையாக ஒன்று ஆசைப்பட்டேன். ஆனால், சற்றும் யோசிக்காமல் ஆசைப்பட்டுவிட்டேன். சின்ன வயதிலிருந்தே பட்டாசு என்றால் பயம். உதிரி வெடியை வெடிக்கவே பயப்படுவேன். நானும் உதிரிவெடியும் பழகி, ஒரு வழியாக சுமுகமாக ஆவதற்குள் தீபாவளி போயே போய்விடும். எல்லாருடைய வெடிகளும் காலியாகும்போதுதான், நான் வெடிக்கவே ஆரம்பித்திருப்பேன்.
அதனாலயே பட்டாசு பெரிதாக வாங்க மாட்டோம். என்னைப் பொறுத்தவரை தீபாவளி என்றால் புதுத் துணி, அம்மாவின் கைமணத்தில் போண்டா, பஜ்ஜிதான் காலை சாப்பாடே. பிறகு நண்பர்கள், சொந்தக்காரர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாரையும் புதுத் துணி அணிந்துகொண்டு பார்க்கப்போவது. கலர்கலராகப் பட்டாசுகள் வாங்கி வெடித்த ஞாபகமே இல்லை. மாடிக்குச் சென்று மற்றவர்கள் வெடிப்பதைப் பார்ப்பதே சந்தோஷமாக இருக்கும். சிறிதுசிறிதாக தீபாவளிக் கொண்டாட்டமே மாறிவிட்டது.