Published : 27 Aug 2018 12:39 PM
Last Updated : 27 Aug 2018 12:39 PM

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் சுஸுகி சியாஸ்

மாருதி சுஸுகி நிறுவனம் தனது சியாஸ் மாடல் காரில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களை சேர்த்து புதியதாக அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் மாடலில் வெளிவந்துள்ள இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 8.19 லட்சமாகும்.

இது சிக்மா சியாஸ் என்றழைக்கப்படுகிறது. இதில் உயர் மதிப்பிலான மாடல் டீசலில் இயங்கும் வகையில் வெளிவந்துள்ளது. ஆல்பா என்ற பெயரிலான அந்த மாடல் காரின் விலை ரூ. 10.97 லட்சமாகும்.

புதிய மாடலில் முன்புற கிரில் தோற்றம் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல முகப்பு விளக்கு தொகுப்பு (கிளஸ்டர்) முழுவதும் மாற்றியமைக்கப்பட்டு அதனுள் புரொஜெக்டர் விளக்கு இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல பகல் நேரத்தில் ஒளிரும் வகையிலான விளக்குகளும் இதில் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல முன்புற பம்பர் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேபோல இதன் சக்கரங்கள் முற்றிலும் அலாய் சக்கரமாக வெளிவந்துள்ளது. பின்புற விளக்குகளிலும் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மாருதி நிறுவனம் சியாஸ் காரை 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் இதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பெட்ரோல் மாடல் காரில் 1.5 லிட்டர் இன்ஜின் உள்ளது புதிய அம்சமாகும். முந்தைய மாடலில் 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டது.  கே-சீரிஸ் வகை இன்ஜினாகும். இது இந்தியாவில் தயாரிக்கப்படுவதாகும். இது 103 பிஹெச்பி மற்றும் 138 நியூட்டன் மீட்டர் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியது. முதல் முறையாக மாருதி சுஸுகி நிறுவனம் ஹைபிரிட் சிஸ்டத்தை பெட்ரோல் இன்ஜினில் பயன்படுத்தியுள்ளது.

டீசல் மாடலை பொறுத்தமட்டில் பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. இதில் 1.3 லிட்டர் டர்போ சார்ஜ்டு டீசல் இன்ஜின் உள்ளது. இது 89 பிஹெச்பி மற்றும் 200 நியூட்டன் மீட்டர் டார்க் திறன் கொண்டது. சோதனை ஓட்டத்தில் பெட்ரோல் வாகனம் லிட்டருக்கு 21.56 கி.மீ. தூரமும், டீசல் வாகனம் ஒரு லிட்டருக்கு 28.09 கி.மீ. தூரம் ஓடியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, டொயோடா யாரிஸ் ஆகிய மாடல் கார்களுக்கு போட்டியாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட ரகத்தில் எத்தகைய சக்கரம் அதாவது 15 அங்குல பிரிசிஷன் கட் அலாய், 15 அங்குல சில்வர் அலாய் மற்றும் 15 அங்குல ஸ்டீல் சக்கரங்களை வாடிக்கையாளர் தேர்வு செய்து கொள்ளும் வசதி உள்ளது.

புதிய மாடல் 7 நிறங்களில் சிக்மா, டெல்டா, ஜீட்டா, ஆல்பா என நான்கு மாடல்களில் வெளிவந்துள்ளன. உள்புற வடிவமைப்பில் மிகப் பெருமளவு மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை.  இருப்பினும் ஸ்டீரிங் வீல் மற்றும் இருக்கைகளில் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஸ்மார்ட்போன் இணைப்புடன் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்டிராய்ட் ஆட்டோ உள்ளிட்ட இணைப்பு வசதிகளைக் கொண்டது. அத்துடன் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய சுஸுகி கனெக்ட் டெலிமேடிக் சிஸ்டமும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த கார் நெக்ஸா விற்பனையகத்தில் விற்பனை செய்யப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x