Last Updated : 24 Aug, 2018 09:24 AM

 

Published : 24 Aug 2018 09:24 AM
Last Updated : 24 Aug 2018 09:24 AM

திரைப் பார்வை: இளமையின் கொண்டாட்டம்! - கீத கோவிந்தம் (தெலுங்கு)

திரையில் விரியும் காதல் கதைகளில் பலவகை உண்டு. நாயகனும் நாயகியும் நேசித்துப் பல தடைகளைத் தாண்டி இணைவது ஒருவகை. ‘காதல் கோட்டை’, ‘மின்னலே’, சமீபத்தில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம். இன்னொரு பிரபலமான வகை, ஈகோவால் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே காதலர்கள், தங்கள் காதலைச் சிக்கலாக்கிக்கொள்வார்கள். ஒரு கட்டத்தில் எல்லாம் சரியாகி ஒன்று சேர்வார்கள்.

‘குஷி’, ‘கண்ட நாள் முதல்’, ‘நீதானே என் பொன் வசந்தம்’, மேயாத மான்’, என இந்த  வகைக்கு உதாரணங்களை அடுக்கலாம். நம் மத்தியில் பிரபலமான இன்னொரு காதல் வகைப் படம், ‘எப்படியாவது இந்தக் காதல் ஜோடி இணைந்துவிட மாட்டார்களா’ எனப் பார்வையாளர்களை ஏங்க வைப்பவை. உதாரணத்துக்கு ‘மூன்றாம் பிறை’ விஜி-சீனு, ‘இதயம்’ ராஜா-கீதா, ‘மௌனராகம்’ திவ்யா-மனோகர், ‘இதயத்தைத் திருடாதே’ பிரகாஷ்-கீதாஞ்சலி, ‘காதலுக்கு மரியாதை’ மினி-ஜீவா, ‘அலைபாயுதே’ ஷக்தி-கார்த்திக், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ஜெஸ்சி-கார்த்திக் என இதுவும் நீளமான பட்டியல்தான்.

இந்தக் காதலர்கள் நமக்குப் பிடித்த நபர்களாக, இவர்கள் எப்படியாவது சேர்ந்து வாழ வேண்டுமே என்ற பதைபதைப்பை ஏற்படுத்தியவர்கள். ஒரு நல்ல காதல் திரைப்படம் அவர்கள் எப்படி இணையப் போகிறார்கள் எனப் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பரிதவிக்கவும் யோசிக்கவும் வைக்கும். அப்படி ஒரு மாயக் காதல் கதையோடு, தெலுங்கில் மிகப் பிரமாதமாக வெளியாகி வந்திருக்கும் திரைப்படம்தான் ‘கீத கோவிந்தம்’.

சம்பவமும் சூழ்நிலைகளும்

கதையின் நாயகன் விஜய் கோவிந்தம், கீதா எனும் பெண்ணை விரும்புகிறான். எதிர்பாராதவிதமாக இருவரும் ஒரே பேருந்தில் இரவுப் பயணம் செய்கிறார்கள். பயணத்தில் ஏற்படும் ஒரு திடீர் நிகழ்வால் கோவிந்தை வெறுக்கிறார் கீதா. இந்தச் சிக்கல், கோவிந்தின் வாழ்வில் எப்படியெல்லாம் தொடர்கிறது, அவர் எப்படி அதிலிருந்து மீள்கிறார், ஒன்றாக இருக்க வேண்டியிருந்தாலும் சூழ்நிலையால் வரும் சண்டைகளை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை.

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருப்பது எனக்குத் தெரியும். அதை இந்தப் படம் நிச்சயம் நிறைவேற்றும்” என்று மிகவும் தன்னம்பிக்கையோடு ஒரு பேட்டியில் கூறியிருந்தார் இந்தப் படத்தின் எழுத்தாளர், இயக்குநர் பரசுராம். பிரபல வெற்றி இயக்குர் பூரி ஜெகனாத்தின் உறவினர். மற்றொரு பிரபல தெலுங்கு இயக்குநரான ஜெகனிடம் சில படங்கள் வேலை பார்த்த பின்னர், வெற்றி, படுதோல்வி எனப் பயணித்து, எழுதி இயக்கியிருக்கும் ஆறாவது படம் இது.

வெளிவந்த படங்களின் சாயல்கள் ஏதுமற்று, கதாபாத்திரங்கள், அவர்களின் சூழல், இவற்றைப் பிணைத்து எழுதும் திறமை இவரது தனித்துவம். அந்த வகையில் நாயகன் விஜய் தேவரகொண்டாவின் முதல்பட வெற்றியின் நிழல் எங்கும் படியாத வண்ணம் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். நாயகன், நாயகியை மட்டுமே அதிகம் முதன்மைப்படுத்த வேண்டிய ஆயாசம் தரக்கூடிய மிக ஆபத்தான கதாபாத்திர வடிவமைப்பு. ஆனால், அவர்களுக்கிடையே நிகழும் ஒரு மாய ரசவாத மாற்றத்தை மிகச் சரியான விகிதத்தில் கதை நகர்வில் காட்சிகளாக்கி இந்த ஆபத்தைக் கடந்துவிடுகிறார் இயக்குநர்.

அபூர்வ மலர்!

“மேடம் மேடம்” என கோவிந்தாக நாயகன் விஜய் தேவரகொண்டாவின் கெஞ்சலும்  தவிப்பும் அடக்கிய கோபமும் சிக்கலில் இருந்து எப்படித் தப்பிப்பது எனும் சிந்தனையுடனான அப்பாவித்தனமான நடிப்பும் அவரை நாயகனாக அல்லாமல் கதாபாத்திரமாகக் காட்டுகிறது. அதேபோல் கீதாவாக மாறியிருக்கிறார் நாயகி ரஷ்மிகா.

அவரது அநாயாசமான உணர்வு வெளிப்பாடுகள் திரையரங்கில் கொண்டாடப்படுகின்றன. வார்த்தைகளால் பேசாமல் கண்ணசைவில் வெறுப்பை வெளிப்படுத்துவது, ஒரு மாயக் கணத்தில் அதுக் காதலாகத் திரும்பியபின் ஏற்படும் ரசனையான மாற்றத்தை முகம் மற்றும் உடல்மொழியில் கொண்டுவரும் அவரது நடிப்பு உயர்ந்த ரகம். 

இதர பாத்திரங்களாக வரும் ராகுல் ராமகிருஷ்ணா, சுப்பராஜு, நாக பாபு, மற்றும் கௌரவ வேடத்தில் வரும் நித்யா மேனன், அனு இம்மானுவேல் உட்பட அனைவரும் கச்சிதமாகப் பொருந்தி நடித்திருக்கிறார்கள். கதையின் இறுதியில் வெளிநாட்டு மாப்பிள்ளையாக வந்து, நகைச்சுவைப் பகுதிகளை மிக இலகுவாகக் கடத்திவிடுகிறார்கள் வென்னல கிஷோரும், பாட்டியாக வரும் அன்னபூர்ணாவும். இளமை கொப்பளிக்கும் கதையோடு இணைத்துச் செல்லும் அபார ஒளிப்பதிவை மணிகண்டன் செய்திருக்கிறார்.

ஒரு இடைவெளிக்குப் பிறகு படத்தின் மொத்தப் பாடல்களைச் சிறப்பாக அமைத்திருக்கிறார் தேசிய விருது பெற்ற, சமகால மலையாளப் படவுலகில் முன்னணி இசையமைப்பாளரான கோபி சுந்தர். 41 வயதாகும் இவர் தமிழில் 2008 –ல் ‘பொய் சொல்லப் போறோம்’ படத்துக்குப் பின்னணி இசையமைத்திருக்கிறார். கடந்த ஜுலை மாதம் சித் ஸ்ரீராமின் மாயாஜாலக் குரலில் வெளிவந்தது முதல்,  அதிகம் கேட்கப்பட்ட பாடலான ‘இன்கேம் இன்கேம் காவாலே’ (இன்னும் என்ன இன்னும் என்ன வேண்டும்), சின்மயியின் குரலில் ‘அக்ஷரம் சதவகுண்டா’ ஆகிய இரு பாடல்களும் கதையில் பொருந்திய விதமும், வசீகரமாகப் படமாக்கப்பட்டிருந்த விதமும் பிரமாதம்.

கறுப்பு வெள்ளை ‘அம்பிகாபதி’ காலம் முதல் ‘பியார் பிரேமா காதல்’ வரை எத்தனையோ விதங்களில் காதல் படங்கள் குறிஞ்சியைப் போல் திரையில் மலர்வது எப்போதாவதுதான். அந்த மாய மலர் ‘கீத கோவிந்தம்’ படத்திலும் அழகாகப் பூத்திருக்கிறது.

தொடர்புக்கு: tottokv@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x