Published : 26 Aug 2018 09:45 AM
Last Updated : 26 Aug 2018 09:45 AM

எசப்பாட்டு 50: ஆணும் பெண்ணும் எதிரெதிர் துருவமல்ல

விமர்சனம், சுயவிமர்சனம் இரண்டும் தனிமனித வாழ்வுக்கும் சமூக வாழ்வுக்கும் இன்றியமையாதவை. நம்மிடம் விமர்சனப் பார்வை இருக்குமளவுக்குச் சுயவிமர்சனப் பார்வை இருப்பதில்லை. ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல இரண்டையும் பெற்றுள்ள சமூகம்தான் சீக்கிரமே தன்னைத் தானே திருத்திக்கொண்டு வேகமாக முன்னேறும்.

ஆண் மனத்தில் ஏற்பட வேண்டிய மாற்றங்களைப் பட்டியலிடத் தொடங்கினால் அவற்றைப் பொறுமையாக உள்வாங்கி, “ஓ.. இவ்வளவு பிரச்சினை நம்மிடம் இருக்கிறதா…” என்று சுயவிமர்சனமாக ஓர் உள்முகப் பயணத்தை மேற்கொள்வதில்லை. மாறாக, “அப்படின்னா பொம்பளைங்க மட்டும் யோக்கியமா” என்று ஒரு நிமிடம்கூட யோசிக்காமல் பட்டியலிட்ட வாயிலேயே திருப்பி அடிக்கும் குணவான்களையே  மீண்டும்  மீண்டும் சந்திக்கிறோம்.

கணவனும் விலங்குதான்

குடும்பத்திலும் வெளியிலும்  பிறருக்கு ஆலோசனை சொல்லும் இடத்திலேயே  தன்னை வைத்துப் பார்த்துக்கொண்ட  ஆண் மனம், சின்ன விமர்சனத்தைக்கூடத் தாங்கிக்கொள்ள முடியாத உளவியல்  சிக்கலில்  மாட்டிக் கொண்டுள்ள தாகத்  தோன்றுகிறது. பெண்ணைவிட  ஆண் உயர்ந்தவன் என்ற கருத்து ஆழமாக நம் மனங்களில் விதைக்கப்பட்டுள்ளது. இதுவே ஆண் - பெண்  உளவியல் சிக்கலுக்கு அடி உரமாக இருக்கிறது.

‘என் கணவனும் ஏனைய விலங்குகளும்’ என்று தலைப்பிட்டு ‘தி இந்து’ ஆங்கில இதழில் சூழலியலாளரான ஜானகி லெனின் ஒரு தொடர் எழுதினார் (பாரதி புத்தகாலயம் அதைப் புத்தகமாகத் தமிழில் வெளியிட்டுள்ளது). அதைப் பார்த்து ஆண்கள் பலர் அவர் மீது கோபப்பட்டுக் கடிதங்கள் எழுதினர். பொறுமையாக அவர் சொல்வதை, சொல்லவருவதை முழுதாகப்  படிக்கக்கூட அவர்களுக்கு நிதானமில்லை. கணவன் மீது  மரியாதை  இருந்தா இப்பிடி எழுதுவியா  என்பதுதான் அவர்களது கோபம். இதுபற்றி அவர் எழுதியது:

“என் கணவனை நான் விலங்கு என்று எழுதுவது உங்களுக்குச் சங்கடமாக இருக்கிறதா? நாம் 96 சதவீதம் சிம்பன்ஸிக்கள். நான் உங்களைச் சீண்டுகிறேன். உண்மைதான். நான் சொல்ல வருவது 96 சதவீதம் இனக்கீற்று அமிலம்/மரபுப் பொருள் (டிஎன்ஏ) நமக்கும்  சிம்பன்ஸிகளுக்கும் பொதுவானது. ஆனால், மூளைத்திறனால் மற்ற விலங்குகளைவிட மேம்பட்டவர்கள் ஆகிவிட்டோம்”.

மேம்பட்ட விலங்கினம்

மனிதருக்கும் விலங்கினத்துக்குமான இடைவெளி மிக மிகச்  சுருங்கியது என்பதை அறிவியல்பூர்வமாக விளக்குகிறார் அவர்.

“நாம் எந்த அளவுக்கு விலங்குகளைவிட  உயர்ந்த நிலையில் இருக்க முயல்கிறோமோ அந்த  அளவுக்கு அவை தாங்கள் மனிதர்களில் இருந்து மாறுபட்டவர்கள் அல்ல என்று உணர்த்துகின்றன. மனிதன் என்பதற்குப் பொருள் என்னவாக இருந்தபோதிலும்கூட என் கணவன் ஒரு விலங்குதான். நீங்களும் நானும்கூட” என்று அப்பத்தியை முடிக்கிறார்.

விலங்குகளுக்கும் நமக்குமே பெரிய வித்தியாச மில்லை என்னும்போது ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப்போகிறது? இதில் உயர்வு தாழ்வு எங்கிருந்து  வரும்?

இன்னும் கூடுதலாக நாம் யோசித்தால் விலங்குகளிடம் ஆண்-பெண்  ஏற்றத்தாழ்வு  இல்லை. ஒடுக்குதல் இல்லை. பாலியல் வன்முறை இல்லை. ஈவ் டீசிங் இல்லை. வரதட்சிணை இல்லை. ஆணவக்கொலைகள் இல்லை.

கைகூடாத தேவஜீவனம்

மறைந்த  எழுத்தாளர் கு.அழகிரிசாமியின், ‘தேவ ஜீவனம்’ என்ற  புகழ்பெற்ற சிறுகதை  நினைவுக்கு வருகிறது. ‘தேவ ஜீவனம்’ பற்றிய பக்திச் சொற்பொழிவுக்குப் போய்ப் பிடிக்காமல் பாதியில் திரும்பும் பெரியவர் ஒருவர் கூற்றாக இவ்வரிகள் வரும்:

“எந்த மிருகமாவது சோத்துக்குத் திண்டாடுமா? காத்துக்குத் திண்டாடுமா? காட்டிலே எங்காவது புலி பட்டினி கிடந்திருக்கா ஐயா, கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு நரிகூட ஜோடி கிடைக்காம திண்டாடியிருக்கா? வயித்தை ரொப்பினாப் போதும். புருசன்னு ஒரு சண்டி  சப்பாணியாவது கிடைச்சாப் போதும், வீடுன்னு ஒரு எலி வளை கிடைச்சாப்போதும்.

எவன்கிட்டே இம்சைப்பட்டாலும் எவன்கிட்டே அவமானப்பட்டாலும் உசுரோட இருந்தாப் போதும்னு நினைக்கிறது பற்றா? பற்று கூடாதுன்னு சுவாமிஜி உபதேசம் பண்றார். இங்கே மிருக ஜீவனத்துக்கு லொண்டா அடிக்கிறப்போ, தேவஜீவனம் பத்திப் பிரசங்கம் நடக்கு!”.

மூன்று கால வாழ்க்கை

ஒரு விரக்தியில் இப்படிப் பேசினாலும் விலங்குகளைவிட மேம்பட்டது மனிதகுலம். உயிரியல் அம்சங்களில் விலங்குகளுக்கும் நமக்கும் வேறுபாடுகள் மிகக்குறைவு என்று ஜானகி லெனின் சொன்னபோதும் ஒரு விஷயத்தில் நாம் முன்னே நிற்கிறோம். ஏனெனில், பிற உயிரினங்கள் அந்த நிமிடத்தில் மட்டுமே அதாவது நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்பவை. ஆனால், மனிதர் மூன்று காலங்களிலும் வாழ்பவர்.

கடந்த காலத்தைப் புரிந்துகொண்டு அதிலிருந்து பாடம் கற்று எதிர்காலத்தை இன்னும் நலமானதாக, நமக்குச் சாதகமானதாக மாற்றியமைக்கப் போராடுவது மனிதகுலம். அதனால்தான் பாவ்லோ பிரையர் மனிதர்களை ‘வரலாற்றின் குழந்தைகள்’ என்றார்.

ஆனால், எவ்வித வரலாற்று உணர்வும் இன்றி இந்த நிமிடத்தில் உணர்வதையும் தோன்றுவதையும் மட்டும் பேசித் திரியும் ஜீவராசிகளாக நாம் ஏன் மாறிப்போனோம்? ஆண்கள் மீதான விமர்சனம் வரும்போது வரலாற்றில் நின்று அதை எதிர்கொள்ளாமல்,  இந்தக் கணத்தில் வாழ்பவர்களாக ஏன் மாறிவிடுகிறோம்? வரலாற்று உணர்வை எது நம்மிடமிருந்து உதிரச்செய்கிறது? நம் அறியாமையா, வெற்று ஆணவமா அல்லது நம் தலையில் ஏறி நிற்கும் பொய்யான –கற்பிதமான – வரலாற்றின் பிடிமானம் அவ்வளவு வலுவாக இருக்கிறதா?

தலைக்குள் ஏற்றப்பட்ட வரலாறு

ஆண் உயர்வு, பெண் தாழ்வெனும் கருத்து ஆணின் கருத்தல்ல. வரலாறு நம் தலையில் ஏற்றியது. ஆணையும் பெண்ணையும் எதிரெதிர் என நமக்குக்  காலம் காலமாகச்  சொல்லிவரும்  நம் சமூகமும் பண்பாடும்தான்  வில்லன்கள். சக பயணிகளாகப் பார்க்காமல் ஆண்களைப் பெண்களும் பெண்களை ஆண்களும் எதிராகப்  பார்க்கும்  பார்வை யை  நாம் உதற வேண்டும். அப்படி உதறுவதற்கு  நீண்ட மனப்பயிற்சி தேவைப்படும்.

அறிவியல் ஆய்வுகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பொதுவான குணாம்சங்கள்  90 சதவீதம் இருப்பதாகவும் வெறும் பத்து சதவீதம்தான் வேறு வேறான குணாம்சங்கள் இருப்பதாகவும் கூறுகின்றன. ஆண்மை, பெண்மை என இரு எதிர்வுகளாக நம் பண்பாடு, வரலாறு நெடுகிலும் கட்டமைத்து வைத்த கற்பிதமெல்லாம் இந்தப் பத்து சதவீதத்துக்குள்ளிருந்து எடுத்துக்கொண்ட சின்ன சதவீதம்தான்.

இணைவுகள் 90 சதவீதம். எதிர்வுகள் பத்து சதவீதத்திலிருந்து கொஞ்சம். நாம் ஏன் எதிர்வுகளையே தலையில் தூக்கிக்கொண்டு அலைகிறோம்? இருவருக்கும் பொதுவான அம்சங்களை உயர்த்திப் பிடித்தால், ஆண்-பெண் சமத்துவம் நமக்கு இயற்கையான ஒன்றாக - இயல்பான ஒன்றாக - ஏற்க வேண்டிய ஒன்றாகச் சட்டெனப் பிடிபட்டுவிடும்.

கல்வி முறையிலேயே விமர்சன –சுயவிமர்சனப் பார்வையை நாம் உள்வாங்கும்படி, நம் பாடத்திட்டமும் கற்றல்-கற்பித்தல் முறைகளும் வகுப்பறை நிகழ்வுகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆண்-பெண் பேதம் இயல்பானதென்று நம் மனங்களில் விதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளைச் செயலிழக்கச் செய்யும் வலுவுள்ள கல்விமுறையைக் கட்டமைக்க வேண்டும்.

கற்பதைவிடவும் கற்றதை மறக்கடிப்பதுதான் ஆணாதிக்கச் சமூகத்தில் மிகப் பெரும் சவாலான பணி. இத்தகைய முயற்சிகளின் மூலம் ஆண் மனம் சுயவிமர்சனப் பார்வையை உள்வாங்கிக்கொண்டால் மாற்றம் எளிதாகும்.

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர் தொடர்புக்கு: tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x