Published : 22 Aug 2018 10:56 AM
Last Updated : 22 Aug 2018 10:56 AM

டிங்குவிடம் கேளுங்கள்: நானும் உதவலாமா?

வேலை இல்லாத குடல்வால் உறுப்பு நமக்கு எதற்கு, டிங்கு?

–தஷ்வந்த், 7-ம் வகுப்பு, இந்து வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, தக்கலை, குமரி.

டாக்டர் கணேசன் எழுதும் தொடரை நீங்கள் படிக்கவில்லையா, தஷ்வந்த்? பெருங்குடலின் முனையில் மிளகாய்போல் நீட்டிக்கொண்டிருக்கும் உறுப்புதான் ‘குடல்வால்’. இன்று இதை உடலுக்கு உதவாத உறுப்பு என்கிறார்கள். ஆனால், முன்னொரு காலத்தில் உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கொடுக்கும் உறுப்பாக இது செயல்பட்டது.

 காலப்போக்கில் குடல்வாலின் பணியை மற்ற நிணநீர் உறுப்புகள் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டன. அதனால் குடல்வாலுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. பயன்படாத உறுப்பு காலப் போக்கில் மறையும் என்பார்கள். இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு குடல்வால் மறைந்தும் போகலாம், அதுவரை இருந்துவிட்டுப் போகட்டுமே!

தண்ணீர் லாரியில் நீர் ஒழுகுவதுபோல, பெட்ரோல் லாரியில் பெட்ரோல் ஒழுகுவது இல்லையே ஏன், டிங்கு?

- ச.பரத், 4-ம் வகுப்பு, மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, பூலுவபட்டி, திருப்பூர்.

பெட்ரோல் எளிதில் தீப்பிடித்து எரியக் கூடியது. தண்ணீர்போல சிந்திக்கொண்டே சென்றால், நெருப்புப் பட்டதும் திகுதிகுவென்று எரிய ஆரம்பித்துவிடும் அல்லவா? அதனால்தான் பெட்ரோல் கொண்டு செல்லும் டேங்கர் லாரியில் எளிதில் ஒழுகாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்லும்போது, அதைத் தண்ணீர்போல யாரும் வீணாக்க விரும்புவார்களா என்ன, பரத்?

அதனால் பெட்ரோலைப் பத்திரமாக எடுத்துச் செல்கின்றனர். தண்ணீரை இப்போது தங்கமாகப் பார்க்கக்கூடிய நிலையில் இருக்கிறோம். இப்போது தண்ணீரையும் பெட்ரோலைப்போல பத்திரமாகச் சிந்தாமல் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் பெட்ரோலுக்குக் கொடுக்கும் மதிப்பை நாம் தண்ணீருக்குத் தருவதில்லை, சிந்திய நீர் போக எஞ்சியிருக்கும் நீரே ஓரிடத்தை சென்றடைவது என்பது வருத்தமானது.

பேன் எவ்வாறு ஒரு தலையிலிருந்து மற்றொரு தலைக்கு இடம்பெயர்கிறது, டிங்கு?

-அ. ஸ்ருதி, 4-ம் வகுப்பு, மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, பூலுவபட்டி, திருப்பூர்.

பேன் ஒட்டுண்ணி உயிரினம். அதனால்தான் மனிதர்களை ஒட்டிக்கொண்டு வாழ்கிறது. அம்மா, அக்கா, தங்கை, தோழி போன்றவர்களுடன் நெருக்கமாக அமர்ந்து, தலையோடு தலையைச் சேர்க்கும்போது பேன் எளிதில் ஒரு தலையிலிருந்து இன்னொரு தலைக்குச் சென்றுவிடுகிறது. பேன் இருப்பவர்கள் பயன்படுத்திய சீப்பு, தொப்பி, தலையணை, துண்டு போன்றவற்றைப் பயன்படுத்தும்போது, அதிலிருந்தும் இன்னொருவர் தலைக்குப் பேன் சென்றுவிடுகிறது, ஸ்ருதி.

முற்பிறவி, மறுபிறவி என்பது உண்டா? அதில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா, டிங்கு?

–எஸ். ஹரிஹரன், 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம், திருச்சி.

தெரிந்த விஷயத்தைப் பற்றிதான் சொல்ல முடியும், ஹரிஹரன். முற்பிறவி, மறுபிறவி என்பதைப் பற்றி எல்லாம் எனக்குத் தெரியாது. அப்படி ஒன்று இருக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை. இந்தப் பிறவியே நிஜம். இதில் நல்லவராகவும் சமுதாய அக்கறையோடும் வாழ்ந்தால் போதும் என்பது என் எண்ணம்.

கேரளாவில் ஏற்பட்டிருக்கும் பேரிடருக்கு நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் என்னிடம் அதிகமாகப் பணம் இல்லை. இருநூறு ரூபாய்க்குள்தான் சேர்த்து வைத்திருக்கிறேன். இதை அனுப்பலாமா? நீயும் அனுப்பி இருக்கிறாயா, டிங்கு?

– எம். அபிநயா, பொள்ளாச்சி.

கேரள மக்களுக்கு உதவ வேண்டும் என்ற உங்களின் நல்ல எண்ணத்தைவிடப் பெரிய விஷயம் வேறு ஏதும் இல்லை, அபிநயா. சின்னச் சின்னத் துளிகளால்தானே பெரு வெள்ளம் உருவாகிறது. என்னிடம் பணம் அதிகம் இல்லையே என்றெல்லாம் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. அவரவருக்கு முடிந்த தொகையை, அது எவ்வளவு  சிறிய தொகையாக இருந்தாலும் அனுப்பி வைக்கலாம். அது பாதிக்கப்பட்டவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.

சின்னத் தொகையா, பெரிய தொகையா என்றெல்லாம் நான் யோசிக்கவில்லை. நான் சேமித்து வைத்திருந்த பணத்தை அனுப்பிவிட்டேன், அபிநயா. உங்களைப் போன்ற ஒரு மாணவிதான் விழுப்புரத்தைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் அனுப்ரியா, தான் சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் பணம் சேர்த்துவந்தார். 3 ஆண்டுகளாகச் சேர்த்த 8,846 ரூபாயை, கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கிவிட்டார்! வாழ்த்துகள் அனுப்ரியா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x